சின்னவண்டி காளியம்மன் கோவில் திருவிழா


சின்னவண்டி காளியம்மன் கோவில் திருவிழா
x
தினத்தந்தி 29 Jun 2023 7:45 PM GMT (Updated: 29 Jun 2023 7:45 PM GMT)

செம்பட்டி அருகே சின்னவண்டி காளியம்மன் கோவில் திருவிழாவில் எருமை கிடா வெட்டி சிறப்பு பூஜை நடந்தது.

திண்டுக்கல்

செம்பட்டி அருகே, ஆத்தூர் நந்தனார் தெருவில் உள்ள சின்னவண்டி காளியம்மன் கோவில் திருவிழா கடந்த 27-ந்தேதி தொடங்கியது. விழாவையொட்டி அக்கரைப்பட்டியில் இருந்து அம்மனை அலங்கரித்து, கோவிலுக்கு அழைத்து வந்தனர். நேற்று முன்தினம் பக்தர்கள் அக்னி சட்டி எடுத்து, பொங்கல் வைத்து வழிபட்டனர். தொடர்ந்து பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. நேற்று அம்மனுக்கு முளைப்பாரி ஊர்வலம் நடைபெற்றது. பின்னர், மாலையில் கோவில் முன்பு பெரிய குழி தோண்டப்பட்டது. எருமை கிடா, பன்றி கிடாவை பலி கொடுப்பதற்கு ஊர்வலமாக அழைத்து வந்து, தோண்டப்பட்ட குழி அருகே, நிறுத்தினர். பின்னர் கோவில் பூசாரி பெருமாள் கையில் அரிவாளுடன் அருள் வந்து சாமி ஆடியபடி வந்தார். எருமை கிடா, பன்றி கிடா மற்றும் சேவல் ஆகியவற்றை பக்தர்கள் முன்னிலையில் வெட்டி அம்மனுக்கு பலி கொடுத்தார். பின்னர் அவற்றின் உடல்களை தோண்டப்பட்ட குழியில் புதைத்தனர். அந்த குழியில், பக்தர்கள் தங்கள் வேண்டுதல் நிறைவேற, உப்பு பாக்கெட்டுகளை வீசினர். இதைத்தொடர்ந்து கோவிலில் அம்மனுக்கு சிறப்பு பூஜை செய்தனர். பின்னர் அம்மன் ஊர்வலமாக பூஞ்சோலைக்கு சென்றது. விழாவில் ஆத்தூர், நந்தனார் தெரு மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகள் மற்றும் மதுரை, கோவை, திருச்சி, திருப்பூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.


Related Tags :
Next Story