சிந்தலவாடி மகா மாரியம்மன் கோவில் தேரோட்டம்


சிந்தலவாடி மகா மாரியம்மன் கோவில் தேரோட்டம்
x

சிந்தலவாடி மகா மாரியம்மன் கோவில் தேரோட்டம் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

கரூர்

திருவிழா

கரூர் மாவட்டம், லாலாபேட்டை அருகே சிந்தலவாடியில் பிரசித்தி பெற்ற மகா மாரியம்மன் கோவில் உள்ளது. இக்கோவில் திருவிழா கடந்த 7-ந்தேதி பூச்சொரிதல் விழாவுடன் தொடங்கியது. தினந்தோறும் பக்தர்கள் காவிரியில் இருந்து புனிதநீர் எடுத்து வந்து மகா மாரியம்மனை வழிபட்டனர்.

நேற்று முன்தினம் பக்தர்கள் காவிரி ஆற்றில் இருந்து மேள தாளத்துடன் பால்குடம் எடுத்து ஊர்வலமாக கோவிலுக்கு வந்தனர்.

தேரோட்டம்

திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியாக நேற்று காலை ேதரோட்டம் நடைபெற்றது. இதையொட்டி மகா மாரியம்மனுக்கு பால், பன்னீர், இளநீர், சந்தனம், மஞ்சள் உட்பட வாசனை திரவியங்களால் அபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டது. பின்னர் உற்சவர் அம்மன் அலங்கரிக்கப்பட்ட தேரில் எழுந்தருளினார்.

பக்தர்கள் தேரை தூக்கி கோவிலை சுற்றி 3 முறை வலம் வந்தனர். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். மாலையில் பெண்கள் பொங்கல் வைத்தும், மாவிளக்கு எடுத்து வந்தும் தங்களது நேர்த்திக்கடனை செலுத்தினர். இரவு வான வேடிக்கை நடைபெற்றது. பாதுகாப்பு ஏற்பாடுகளை லாலாபேட்டை போலீசார் செய்திருந்தனர்.


Next Story