மேலூர் அருகே இறைச்சி கடைக்காரர் வீட்டில் பெட்ரோல் குண்டு வீச்சு


மேலூர் அருகே இறைச்சி கடைக்காரர் வீட்டில் பெட்ரோல் குண்டு வீச்சு
x
தினத்தந்தி 28 March 2023 2:07 AM IST (Updated: 28 March 2023 2:11 AM IST)
t-max-icont-min-icon

மேலூர் அருகே இறைச்சி கடைக்காரர் வீட்டில் பெட்ரோல் குண்டு வீசப்பட்டது

மதுரை

மேலூர்

மேலூர் அருகே இறைச்சி கடைக்காரர் வீட்டில் பெட்ரோல் குண்டு வீசப்பட்டது.

வாக்குவாதம்

மதுரை மாவட்டம் மேலூர் அருகே உள்ள திருவாதவூரை சேர்ந்தவர் ராஜாமுகமது (வயது 50). இறைச்சி விற்பனை செய்யும் கடை வைத்துள்ளார். இவர் தனது மனைவி ரம்ஜானுடன் திருவாதவூரில் இருந்து மோட்டார் சைக்கிளில் சென்றுள்ளார். அப்போது அவ்வழியாக வந்த மற்றொரு மோட்டார் சைக்கிள் எதிர்பாராதவிதமாக அவர்கள் மீது மோதியது.

இதில் ராஜாமுகமதுவும், ரம்ஜானும் காயமடைந்தனர். அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த வாலிபர்களுக்கும், ராஜாமுகமதுவுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதையடுத்து அருகில் இருந்தவர்கள் அவர்களை சமரசம் செய்து அனுப்பி வைத்தனர்.

பெட்ரோல் குண்டு

இந்நிலையில் நேற்று முன்தினம் நள்ளிரவில் ராஜாமுகமதுவின் வீட்டில் மர்ம நபர்கள் பெட்ரோல் குண்டு வீசி விட்டு தப்பி ஓடிவிட்டனர். இதில் திரை துணி தீயில் எரிந்தது. வீட்டின் பெட்ரோல் நிரப்பி வீசப்பட்ட பாட்டில் வீட்டின் முன்பு உடைந்து சிதறி கிடந்தது.

இதுகுறித்து மேலூர் போலீஸ் நிலையத்தில் ராஜாமுகமது புகார் அளித்தார். இதையடுத்து மதுரை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சிவபிரசாத், மேலூர் போலீஸ் துணை சூப்பிரண்டு ஆர்லியஸ்ரெபோனி, இன்ஸ்பெக்டர் மன்னவன், தனிப்பிரிவு போலீசார் தினேஷ்குமார், ஜானகிராமன், மணிமாறன், செந்தில்பாண்டி மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர்.

போலீசாரின் முதல் கட்ட விசாரணையில் அதே ஊரை சேர்ந்த 4 பேர் இந்த சம்பவத்தில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.

இதுகுறித்து மேலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து பெட்ரோல் குண்டு வீசிய மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.


Next Story