வள்ளியூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் சித்திரை திருவிழா தேரோட்டம்


வள்ளியூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் சித்திரை திருவிழா தேரோட்டம்
x

வள்ளியூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் சித்திரை திருவிழா தேரோட்டம் நடந்தது. விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு வடம் பிடித்து தேரை இழுத்தனர்.

திருநெல்வேலி

வள்ளியூர்:

வள்ளியூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் சித்திரை திருவிழா தேரோட்டம் நடந்தது. விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு வடம் பிடித்து தேரை இழுத்தனர்.

சித்திரை திருவிழா

நெல்லை மாவட்டத்தில் உள்ள பிரசித்தி பெற்ற குடவரை கோவில்களில் ஒன்றான வள்ளியூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் ஆண்டுதோறும் சித்திரை திருவிழா சிறப்பாக கொண்டாடப்படும். கோவிலில் இந்த ஆண்டு சித்திரை திருவிழா கடந்த 20-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.

தொடர்ந்து 10 நாட்கள் நடைபெறும் விழா நாட்களில் தினமும் சுவாமி- அம்பாளுக்கு சிறப்பு அபிஷேகம், பூஜைகள், கும்பாபிஷேகம், சுவாமி-அம்பாள் பல்வேறு வாகனங்களில் வீதி உலா போன்றவை நடைபெறுகிறது.

தேரோட்டம்

9-ம் திருநாளான நேற்று தேரோட்டம் நடைபெற்றது. இதையொட்டி காலையில் சிறப்பு பூஜைகள் நடந்தது. பின்னர் சுவாமி-அம்பாள் தேரில் எழுந்தருளினர். காலை 10.10 மணிக்கு தேரோட்டம் தொடங்கியது. சபாநாயகர் அப்பாவு வடம் பிடித்து இழுத்து தேரோட்டத்தை தொடங்கி வைத்தார். திரளான பக்தர்கள் வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா, வேலனுக்கு அரோகரா போன்ற பக்தி கோஷங்களை முழங்கியவாறு வடம் பிடித்து தேரை இழுத்தனர். 4 ரத வீதிகளின் வழியாக சென்ற தேர் மீண்டும் நிலையை வந்தடைந்தது. விழாவில் அலெக்ஸ் அப்பாவு, வள்ளியூர் பேரூராட்சி தலைவர் ராதா ராதாகிருஷ்ணன், துணைத்தலைவர் கண்ணன், அரசு ஒப்பந்ததாரர் சிவசுப்பிரமணியன், விழா பூஜை கட்டளை அக்தார் லக்குமணன், ஆதிபாண்டி, சுப்பிரமணியன், ரவி, தி.மு.க. மாவட்ட துணை செயலாளர் நம்பி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

இன்று, தீர்த்தவாரி

மதியம் வேலாண்டி தம்பிரான் சுவாமிகள் அறக்கட்டளை சார்பில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இரவில் சுவாமி-அம்பாள் பல்லக்கில் எழுந்தருளி வீதியுலா வந்து பக்தர்களுக்கு காட்சி கொடுத்தனர்.

விழாவையொட்டி வள்ளியூர் துணை போலீஸ் சூப்பிரண்டு யோகேஷ்குமார் மேற்பார்வையில், இன்ஸ்பெக்டர் சாகுல் ஹமீது தலைமயில் ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

இன்று (சனிக்கிழமை) தீர்த்தவாரி நடக்கிறது. விழா ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் மற்றும் மண்டகபடிதாரர்கள் செய்து இருந்தனர்.


Next Story