சிறுவாச்சூர் மதுரகாளியம்மன் கோவிலில் சித்திரை பவுர்ணமி விழா


சிறுவாச்சூர் மதுரகாளியம்மன் கோவிலில் சித்திரை பவுர்ணமி விழா
x

சிறுவாச்சூர் மதுரகாளியம்மன் கோவிலில் சித்திரை பவுர்ணமி விழா சண்டி மஞ்சரி மகாஹோமத்துடன் தொடங்கியது.

பெரம்பலூர்

பெரம்பலூரை அடுத்த சிறுவாச்சூரில் உள்ள ஆதிசங்கரர் வழிபட்ட பெருமை பெற்ற மதுரகாளியம்மன் கோவிலில் மகா கும்பாபிஷேகம் கடந்த ஏப்ரல் மாதம் 5-ந்தேதி விமரிசையாக நடந்தது. இதனைத்தொடர்ந்து மண்டல பூஜைகள் நாள்தோறும் நடைபெற்று வருகிறது. இதனிடையே சென்னை கோட்டூர் ஸ்ரீமகாமேரு மண்டலி சார்பில் 13-வது சித்திரை பவுர்ணமி விழா நேற்று தொடங்கியது. இதையொட்டி உலக நன்மைக்காகவும், பருவமழை தவறாமல் பெய்து தனதானியம் பெருகிடவும், பொதுமக்கள் நோய்களில் இருந்து விடுபட்டு ஆரோக்கியமாக வாழவும் வேண்டி சண்டி மஞ்சரி மகா ஹோமம் நடந்தது. விழாவிற்கு ஸ்ரீமதுராம்பிகாநந்த பரமேந்திர சரஸ்வதி அவதூத சுவாமிகள் தலைமை தாங்கி சண்டி மஞ்சரி ஹோமத்தை தொடங்கி வைத்து பக்தர்களுக்கு அருளாசி வழங்கினார். இதில் யாகசாலை முன்பு கும்பகலசங்கள் வைக்கப்பட்டு, ஸ்ரீமகா மேரு மண்டலியின் நிர்வாக பொறுப்பாளர் சுப்ரமணியன் முன்னிலையில் கும்ப பூஜைகள் நடந்தன. இன்று (வெள்ளிக்கிழமை) காலை 6.30 மணி முதல் 7.30 மணிவரை குருவுக்கு பாதபூஜை நடக்கிறது. அதனைத்தொடர்ந்து காலை 8 மணிக்கு தொடங்கி காலை 11 மணிவரை ஸ்ரீநவாவரண பூஜையும், நவாவரண ஹோமமும், மதியம் 1 மணி வரை அகண்ட ஸ்ரீலலிதா சகஸ்ரநாம பாராயணமும், குங்கும அர்ச்சனையும் நடக்கிறது. இதில் திரளான சுமங்கலிப் பெண்கள் கலந்து கொண்டு பாராயணத்துடன் குங்கும அர்ச்சனை செய்கின்றனர்.


Next Story