குற்றாலநாதர் சுவாமி கோவிலில் சித்திரை விசு திருவிழா
குற்றாலம் குற்றாலநாதர் சுவாமி கோவிலில் சித்திரை விசு திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.
குற்றாலம் குற்றாலநாத சுவாமி கோவிலில் ஆண்டு தோறும் நடைபெறும் சித்திரை விசு திருவிழா நேற்று காலை 6 மணிக்கு கொடியேற்றத்துடன் தொடங்கியது. கொடி மரத்திற்கு சிறப்பு பூஜைகள் மற்றும் தீபாராதனை நடைபெற்றது. நிகழ்ச்சியில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். திருவிழா வருகிற 14-ந் தேதி வரை நடைபெறுகிறது. தினமும் காலை, மாலை சிறப்பு பூஜைகள் மற்றும் சுவாமி -அம்பாள் வீதி உலா நடைபெறுகிறது.
திருவிழாவின் ஐந்தாம் நாளான 9-ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை) தேரோட்டம் நடைபெறுகிறது. இதில் நான்கு தேர்கள் வடம் பிடித்து இழுக்கப்படுகின்றன.
வருகிற 11-ந் தேதி காலை 9-30 மணி மற்றும் இரவு 7 மணிக்கு நடராஜ மூர்த்திக்கு தாண்டவ தீபாராதனையும், 12-ந் தேதி சித்திர சபையில் காலை 10 மணிக்கு நடராஜமூர்த்திக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் பச்சை சாத்தி தாண்டவ தீபாராதனையும் நடக்கிறது.
14-ந் தேதி சித்திரை விசு தீர்த்தவாரி காலை 9-20 மணிக்கு மேல் நடைபெறுகிறது.
விழா ஏற்பாடுகளை இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் அன்புமணி, உதவி ஆணையாளர்கள் கவிதா, கண்ணதாசன் மற்றும் கோவில் பணியாளர்கள் செய்து வருகிறார்கள்.