சித்தப்பட்டினம் திரவுபதி அம்மன் கோவில் தேரோட்டம்


சித்தப்பட்டினம் திரவுபதி அம்மன் கோவில் தேரோட்டம்
x
தினத்தந்தி 5 Aug 2023 12:15 AM IST (Updated: 5 Aug 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

75 ஆண்டுகளுக்கு பிறகு நடந்த சித்தப்பட்டினம் திரவுபதி அம்மன் கோவில் தேரோட்டத்தை வசந்தம் கார்த்திகேயன் எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்.

கள்ளக்குறிச்சி

திருக்கோவிலூர்:

மணலூர்பேட்டை அருகே சித்தப்பட்டினம் கிராமத்தில் உள்ள திரவுபதி அம்மன் கோவிலில் ஆடி மாத திருவிழா நடைபெற்று வருகிறது. கடந்த 10 நாட்களாக அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் வீதியுலா நடந்தது. விழாவில் முக்கிய நிகழ்ச்சிகளில் ஒன்றான தேரோட்டம் நேற்று நடைபெற்றது.

இதையொட்டி திரவுபதி அம்மனுக்கு பால், சந்தனம், இளநீர் உள்ளிட்ட பல்வேறு பொருட்களால் அபிஷேகம் நடந்தது. பின்னர் அலங்கரிக்கப்பட்ட உற்சவர், கோவிலில் முன்பு தயார் நிலையில் இருந்த 29 அடி உயர தேரில் எழுந்தருளினார்.

தேரோட்டம்

தீபாராதனை காண்பித்ததும் கள்ளக்குறிச்சி தெற்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் வசந்தம் கார்த்திகேயன் எம்.எல்.ஏ. வடம் பிடித்து தேரை இழுத்து தொடங்கி வைத்தார். இதனை தொடர்ந்து அங்கு கூடியிருந்த பக்தர்கள், பக்தி கோஷமிட்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர். கோவிலில் இருந்து புறப்பட்ட தேர், முக்கிய வீதிகள் வழியாக சென்றது. வழிநெடுக்கிலும் கிராம மக்கள், படையல் செய்து வழிபட்டனர். பின்னர் தேர் நிலையை வந்தடைந்தது.

விழாவில் மணலூர்பேட்டை பேரூராட்சி மன்ற தலைவர் ரேவதிஜெய்கணேஷ், நகர தி.மு.க. செயலாளர் வக்கீல் ஜெய்கணேஷ், ஒன்றிய தி.மு.க. செயலாளர்கள் பாரதிதாசன், அய்யனார், கள்ளக்குறிச்சி மாவட்ட இந்து சமய அறநிலையத்துறை தலைவர் வக்கீல் பாலாஜிபூபதி, மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர்கள் கனகநந்தல் ஏ.உதயா, அரும்பரம்பட்டு ராஜீவ்காந்தி, கள்ளக்குறிச்சி மாவட்ட ஆவின் துணை தலைவர் துரை.பாலகிருஷ்ணன், முன்னாள் நகர தி.மு.க. செயலாளர் தெய்வசிகாமணி, முன்னாள் பேரூராட்சி கவுன்சிலர் சையத்அலி, தி.மு.க. நிர்வாகி சரவணன் மற்றும் இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள், பக்தர்கள் கலந்து கொண்டனர்.

75 ஆண்டுகளுக்கு பிறகு...

இந்த கோவிலில் பல லட்சம் ரூபாய் செலவில் புதிதாக தேர் செய்யப்பட்டு, 75 ஆண்டுகளுக்கு பிறகு தேரோட்டம் நேற்று நடந்தது குறிப்பிடத்தக்கது. தேரோட்டத்திற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள், விழாக்குழுவினர், முக்கிய பிரமுகர்கள், கிராம மக்கள் செய்திருந்தனர். விழாவின் சிகர நிகழ்ச்சியான தீமிதி திருவிழா வருகிற 7-ந் தேதி (திங்கட்கிழமை) நடக்கிறது.

1 More update

Next Story