கரூர் மாநகராட்சி குடிநீர் உந்து நிலையத்தில் குளோரின் வாயு கசிவு


கரூர் மாநகராட்சி குடிநீர் உந்து நிலையத்தில் குளோரின் வாயு கசிவு
x

கரூர் மாநகராட்சி குடிநீர் உந்து நிலையத்தில் குளோரின் வாயு கசிவு ஏற்பட்டது. இதனை தீயணைப்பு வீரர்கள் 10 மணி நேரம் போராடி வாயு கசிவை சீர் செய்தனர்.

கரூர்

குடிநீர் உந்து நிலையம்

கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட மூலக்காட்டனூரில் மாநகராட்சி குடிநீர் உந்து நிலையம் அமைந்துள்ளது-. இந்நிலையத்தில் கியாஸ் குளோரினேசன் பகுதி உள்ளது. இப்பகுதியில் நேற்றுமுன்தினம் இரவு குளோரின் உருளையில் குளோரின் வாயு கசிவு ஏற்பட்டது. இதுகுறித்து அங்கு பணியில் இருந்த மாநகராட்சி ஊழியர்கள் கரூர் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். தகவலின்பேரில் கரூர் மாவட்ட தீயணைப்பு மீட்பு பணிகள் துறை மாவட்ட அலுவலர் ஜெகதீஷ் உத்தரவின்பேரில், உதவி மாவட்ட அலுவலர் சந்திரகுமார் தலைமையில் நிலைய அலுவலர் திருமுருகன் மற்றும் 11 தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர்.

10 மணி நேர போராட்டம்

இதனைத்தொடர்ந்து தீயணைப்பு வீரர்கள் மற்றும் மாநகராட்சி ஊழியர்கள் இணைந்து குளோரின் வாயு கசிவை நிறுத்த போராடினர். தொடர்ந்து 10 மணி நேர போராட்டத்திற்கு பிறகு தீயணைப்பு வீரர்கள் குளோரின் வாயு கசிவை நிறுத்தி நிலைமையை சீர் செய்தனர். இதனால் பெரும் பாதிப்பு தடுத்து நிறுத்தப்பட்டது. இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


Next Story