அமெரிக்காவில் இருக்கும் சோழர் கால சிலைகள் - மீட்க கோரி சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் மத்திய, மாநில அரசுகளுக்கு கடிதம்
அமெரிக்காவில் இருக்கும் சோழர் காலத்து 6 பழமையான சிலைகளை மீட்பதற்கு ஒப்புதல் வழங்க மத்திய, மாநில அரசுகளுக்கு சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் கடிதம் எழுதி உள்ளனர்.
சென்னை,
தமிழகத்தில் இருந்து பழமையான, பிரசித்த பெற்ற கோவில்களில் இருந்து திருடப்பட்ட வெண்கல சிலைகள் மற்றும் பழமையான சிலைகளை சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் மீட்டு வருகின்றனர்.
அதன்படி, கள்ளக்குறிச்சி மாவட்டம் வீரசோழபுரம் பகுதியில் உள்ள சிவன் கோவிலில் இருந்து சுமார் 70 ஆண்டுகளுக்கு முன்னர் திருடப்பட்ட 11-ம் நூற்றாண்டை சேர்ந்த சோழர் கால 6 பழமையான சிலைகள் அமெரிக்காவில் உள்ள ஏல நிறுவனங்களிடமும், தனியார் அமைப்புகளிடம் இருப்பதை சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் கண்டு பிடித்தனர்.
இந்நிலையில், அமெரிக்காவில் இருந்து இந்த சிலைகளை மீட்பதற்கு மத்திய, மாநில அரசுகளுக்கு சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் அனுமதி கடிதம் எழுதி உள்ளனர். அந்த கடிதத்தில், அந்த சிலைகள் அனைத்துக்கும் உரிய அசல் ஆவணங்கள் அனைத்தும் நம்மிடம் உள்ளது என்றும் எனவே அந்த சிலைகளை மீட்பதற்கு மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என கூறியுள்ளனர்.
70 ஆண்டுகளுக்கு முன்னர் இந்த சிலைகள் திருடப்பட்டாலும் கடந்த 2018-ம் ஆண்டு தான் இந்த சிலைகள் திருடப்பட்டது தெரிய வந்துள்ளது. இது தொடர்பாக வழக்கறிஞர் ஒருவர் தொடர்ந்த வழக்கின் அடிப்படையில் சிலை கடத்தல் மீட்பு பணிகள் நடந்து வருவது குறிப்பிடத்தக்கது.