கடலூரில் என்ஜின் கோளாறு: சோழன் எக்ஸ்பிரஸ் ரெயில் நடுவழியில் நிறுத்தம் 2 மணி நேரம் தாமதமாக புறப்பட்டதால் பயணிகள் அவதி


கடலூரில் என்ஜின் கோளாறு:    சோழன் எக்ஸ்பிரஸ் ரெயில் நடுவழியில் நிறுத்தம்    2 மணி நேரம் தாமதமாக புறப்பட்டதால் பயணிகள் அவதி
x

கடலூரில் என்ஜின் கோளாறு காரணமாக சோழன் எக்ஸ்பிரஸ் ரெயில் நடுவழியில் நிறுத்தப்பட்டது. இதனால் சுமார் 2 மணி நேரம் தாமதமாக புறப்பட்டதால் பயணிகள் அவதியடைந்தனர்.

கடலூர்

கடலூர் முதுநகர்,

நடுவழியில் நின்ற ரெயில்

சென்னையில் இருந்து கடலூர் வழியாக திருச்சிக்கு தினசாி சோழன் எக்ஸ்பிரஸ் ரெயில் இயக்கப்பட்டு வருகிறது. இந்த ரெயில் நேற்று காலை 7.15 மணிக்கு சென்னை எழும்பூரில் இருந்து புறப்பட்டது. இதையடுத்து காலை 10.48 மணிக்கு கடலூர் திருப்பாதிரிப்புலியூர் ரெயில் நிலையத்திற்கு வந்தது. பின்னர் அங்கிருந்து சோழன் எக்ஸ்பிரஸ் ரெயில் காலை 10.53 மணிக்கு புறப்பட்டது. இந் நிலையில் ரெயில் புறப்பட்ட சிறிது நேரத்தில் மின்சார என்ஜின் பழுதாகி சூரப்பநாயக்கன் சாவடிக்கும்-செல்லங்குப்பத்திற்கும் இடையே நடு வழியில் நின்றது.

டீசல் என்ஜின்

இதுபற்றி என்ஜின் டிரைவர், ரெயில்வே அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தார். அதன்பேரில் கடலூர் துறைமுக சந்திப்பு ரெயில் நிலையத்தில் இருந்து ரெயில்வே அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து, பழுதான என்ஜினை சரி செய்யும் பணியில் ஈடுபட்டனர்.

சுமார் ஒரு மணி நேரமாகியும் பழுதான என்ஜின் சரி செய்யப்படவில்லை. மேலும் ரெயில் நடுவழியில் நின்றதால், பயணிகள் அனைவரும் கடும் அவதிக்குள்ளாகினர். இதற்கிடையே நெல்லிக்குப்பத்தில் இருந்து டீசல் என்ஜின் ஒன்று வரவழைக்கப்பட்டது.

பயணிகள் அவதி

பின்னர் அந்த என்ஜின், சோழன் எக்ஸ்பிரஸ் ரெயிலுடன் இணைக்கப்பட்டது. தொடர்ந்து மதியம் 12.15 மணியளவில் கடலூர் துறைமுக சந்திப்பு ரெயில் நிலையத்திற்கு கொண்டு செல்லப்பட்டு ரெயில் நிறுத்தப்பட்டது.

இதற்கிடையே விழுப்புரத்தில் இருந்து மாற்று மின்சார என்ஜின் வரவழைக்கப்பட்டது. தொடர்ந்து அந்த என்ஜின், சோழன் எக்ஸ்பிரஸ் ரெயிலுடன் இணைக்கப்பட்டதும் மதியம் 1.05 மணிக்கு மீண்டும் கடலூர் துறைமுக சந்திப்பு ரெயில் நிலையத்தில் இருந்து திருச்சி நோக்கி புறப்பட்டு சென்றது.

வழக்கமாக கடலூர் துறைமுக சந்திப்பு ரெயில் நிலையத்தில் இருந்து காலை 10.51 மணிக்கு புறப்படும் சோழன் எக்ஸ்பிரஸ் நேற்று என்ஜின் கோளாறால் சுமார் 2¼ மணி நேரம் தாமதமாக புறப்பட்டு சென்றதால் பயணிகள் கடும் அவதியடைந்தனர்.


Next Story