அடிப்படை வசதிகள் இன்றி காணப்படும் சோழபுரம் பஸ் நிறுத்தம்


அடிப்படை வசதிகள் இன்றி காணப்படும் சோழபுரம் பஸ் நிறுத்தம்
x

அடிப்படை வசதிகள் இன்றி காணப்படும் சோழபுரம் பஸ் நிறுத்தம்

தஞ்சாவூர்

திருப்பனந்தாள்

அடிப்படை வசதிகள் இன்றி காணப்படும் சோழபுரம் பஸ் நிறுத்தத்தினால் பயணிகள் அவதிப்பட்டு வருகின்றனர்.

சோழபுரம்

தஞ்சை மாவட்டம் கும்பகோணம் தாலுகாவில் உள்ள சோழபுரம் ஒரு பேரூராட்சியாகும். இந்த பேரூராட்சியில் இருந்து திருவிடைமருதூர் 15 கிலோமீட்டரும், திருப்பனந்தாள் 7 கிலோமீட்டரும், கும்பகோணம் 13 கிலோமீட்டரும் தொலைவில் உள்ளது. கும்பகோணத்தில் இருந்து சென்னைக்கு செல்லக்கூடிய மெயின் வழியில் தான் சோழபுரம் உள்ளது.

இந்த சோழபுரத்தை சுற்றிலும் ஏராளமான குக்கிராமங்கள் உள்ளன. இக்கிராமங்களில் வசிக்கும் மக்கள் எல்லாம் ஏதாவது பொருட்கள் வாங்க வேண்டும் என்றால் சோழபுரத்திற்கு தான் பெரும்பாலும் வர வேண்டும். மேலும் இங்குள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் கிராமப்புற மாணவ, மாணவிகள் அதிகம்பேர் படித்து வருகின்றனர்.

ஆட்டோக்கள் நிற்கும் இடம்

கும்பகோணத்தில் இருந்து சென்னைக்கு செல்லக்கூடிய பஸ்கள் மட்டுமின்றி திருப்பனந்தாள், அணைக்கரை, பந்தநல்லூர், மணல்மேடு பகுதிகளுக்கு செல்லக்கூடிய பஸ்களும் சோழபுரம் வழியாக தான் சென்று வருகிறது. இப்படி எப்போதும் போக்குவரத்து நடைபெறக்கூடிய மெயின்ரோட்டில் உள்ள இந்த சோழபுரத்தில் பஸ் நிறுத்தம் உள்ளது. அதாவது பஸ்கள் வந்து நின்று செல்லும் வகையில் கட்டப்பட்டுள்ளது.

இரும்பு தூண்களை கொண்டு தகரத்தால் மேற்கூரை அமைக்கப்பட்டுள்ள இந்த பஸ் நிறுத்தத்தில் ஒரு பஸ் நிற்கும் அளவுக்கு வசதி உள்ளது. ஆனால் தற்போது இந்த பஸ் நிறுத்தத்தில் பஸ்கள் வந்த நிற்பது இல்லை. தரைதளமும் மண்ணால் ஆனது என்பதால் மேடு, பள்ளமாக காட்சி அளிக்கிறது. பஸ்கள் வந்து செல்லாத காரணத்தினால் ஆட்டோக்கள், லோடு ஆட்டோக்கள் நிழலுக்காக நிற்கக்கூடிய இடமாக மாறிவிட்டது. பயணிகள் அங்கே அமருவதற்கு எந்தவித வசதியும் செய்யப்படவில்லை.

மக்கள் சிரமம்

இதனால் பயணிகள் யாரும் அந்த பஸ் நிறுத்தத்திற்கு செல்வது கிடையாது. கும்பகோணம், அணைக்கரை உள்ளிட்ட பகுதிகளில் இருந்து வரக்கூடிய பஸ்களும் மெயின்ரோட்டிலேயே நின்று பயணிகளை ஏற்றி, இறக்கிவிட்டு சென்று விடுகின்றன. பஸ்சிற்காக காத்து இருக்கக்கூடிய பயணிகளும் வெயிலில் சாலையோரத்தில் தான் காத்து நிற்க வேண்டிய நிலை உள்ளது. மழை பெய்தால் அருகில் உள்ள கடைகளுக்குள் நின்று தான் பஸ் ஏற வேண்டிய பரிதாப நிலை உள்ளது.

சோழபுரம் சாலையில் எப்போதும் போக்குவரத்து அதிகமாகவே இருக்கும். குறிப்பாக கும்பகோணத்தில் இருந்து சென்னைக்கு கார், வேன்களில் செல்பவர்களும், அதேபோல் சென்னையில் இருந்து கும்பகோணம் நோக்கி வருபவர்களும் அதிவேகமாகவே தான் செல்கிறார்கள். இதனால் சோழபுரம் கடைவீதியில் சாலையை கடந்து செல்வதற்கு மக்கள் மிகவும் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர்.

பஸ் நிறுத்தத்தை மேம்படுத்த வேண்டும்

பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகளும் சிரமப்பட்டு வருகின்றனர். விபத்துக்கள் ஏதும் நடைபெறாமல் இருக்க சோழபுரத்திற்குள் வாகனங்கள் மெதுவாக வந்து செல்லும் வகையில் இரும்பு கம்பிகளை வைத்து வேகத்தை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது அனைவரது எதிர்பார்ப்பாகும். மேலும் பயணிகளுக்கு பயன்படாத வகையில் உள்ள பஸ் நிறுத்தத்தை மேம்படுத்தி சோழபுரத்திற்கு வரக்கூடிய அனைத்து பஸ்களும் அந்த பஸ் நிறுத்தத்திற்குள் வந்து செல்லும் வகையில் மேற்கூரைகள் அமைக்கப்பட வேண்டும்.

அதாவது தாராசுரம் பஸ் நிறுத்தத்தில் மழை, வெயில் என எந்த காலத்திலும் மக்கள் பாதுகாப்பாக நிற்க முடியும். அதுபோன்று சோழபுரத்திலும் பஸ் நிறுத்தம் அமைப்பதுடன் பயணிகள் அமருவதற்கு இருக்கைகள், மின்விளக்குகள், குடிநீர் வசதி, கழிவறை வசதி போன்ற அடிப்படை வசதிகளை ஏற்படுத்தி கொடுக்க வேண்டும். பஸ்கள் கால அட்டவணை வைப்பதுடன் போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகளும் செய்ய வேண்டும் என்பது பயணிகளின் எதிர்பார்ப்பாகும்.


Next Story