கிறிஸ்தவர், இஸ்லாமியர்கள் கடன் பெற விண்ணப்பிக்கலாம்: கலெக்டர் செந்தில்ராஜ்
தூத்துக்குடி மாவட்டத்தில் கிறிஸ்தவர், இஸ்லாமியர்கள் சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டுக் கழகத்தின் மூலம் கடன் பெற விண்ணப்பிக்கலாம் என்று மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ் தெரிவித்து உள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:-
கடன் உதவி
தூத்துக்குடி மாவட்டத்தில் கிறிஸ்தவர், இஸ்லாமியர், சீக்கியர், சமணர், பார்சியர் மற்றும் புத்தமதத்தினர் ஆகிய சிறுபான்மையினருக்கு தமிழ்நாடு சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டுக் கழகத்தின் மூலம் தனிநபர்கடன் அதிகபட்சமாக ரூ.30 லட்சம் வரையிலும், கைவினை கலைஞர்களுக்கு ரூ.10 லட்சம் கடன், சுயஉதவிக் குழுக்களுக்கான சிறுதொழில்கடன் ரூ.15 லட்சம், கல்விக்கடன் ரூ.20 லட்சம் முதல் ரூ.30 லட்சம் வரையும் குறைந்த வடடி விகிதத்தல் கூட்டுறவு வங்கிகள் மூலம் வழங்கப்பட்டு வருகிறது. ஏற்கனவே செய்து வரும் தொழிலை அபிவிருத்தி செய்வதற்கும் கடனுதவி வழங்கப்படுகிறது.
தகுதிகள்
இந்த கடன்களை பெறுவதற்கு விண்ணப்பதாரர் 18 வயது பூர்த்தியடைந்தவராக இருத்தல் வேண்டும். குடும்ப ஆண்டு வருமானம், கிராமப்புறங்களில் வசிப்பவர்களுக்கு ரூ.98 ஆயிரமும், நகர்ப்புறங்களில் வசிப்பவர்களுக்கு ரூ.1 லட்சத்து 20 ஆயிரத்துக்கு மிகாமலும் இருக்க வேண்டும். கடன் தொகை ரூ.20 லட்சத்துக்கு மேல் பெற விரும்புகிறவர்கள் ஆண்டு வருமானம் ரூ.8 லட்சத்துக்கு மிகாமலும் இருத்தல் வேண்டும். ஒருகுடும்பத்தில் ஒரு நபருக்கு மட்டுமே கடனுத விவழங்கப்படும்.
விண்ணப்பிக்கலாம்
தூத்துக்குடி மாவட்டத்தில் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் உள்ள மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகம், தூத்துக்குடி மாவட்ட கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் அலுவலகம், தூத்துக்குடி மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி, நகர கூட்டுறவு வங்கி, தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கிகளில் விண்ணப்பப் படிவத்தை கட்டணமின்றி பெற்று, அந்த விண்ணப்பத்தை பூர்த்தி செய்து தேவையான சான்றிதழ்கள் மற்றும் ஆவணங்களுடன் தூத்துக்குடி கூட்டுறவு சங்கங்களின் மண்டல இணைப்பதிவாளர், மத்திய, நகர, தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கிகளில் விண்ணப்பித்து ஒப்புகை பெற்றுக் கொள்ளுதல் வேண்டும். அதே போன்று வெண்மைப்புரட்சி ஏற்படுத்தும் வகையில் கறவைமாடு கொள்முதல் கடன் பெருமளவில் பெறுவதற்கு ஆவின் மேலாளரை அணுகலாம். இந்த கடன் திட்டத்தில் பயனடைந்து பெருமளவு தொழில் முனைவோர்களாக மாறும் சூழலை ஏற்படுத்தி பொருளாரதாரத்தை மேம்படுத்தலாம்.
இவ்வாறு அவர் தெரிவித்து உள்ளார்.