புனித வெள்ளியையொட்டி கிறிஸ்தவ ஆலயங்களில் சிறப்பு பிரார்த்தனை-சிலுவை பாதை வழிபாட்டில் கிறிஸ்தவர்கள் பங்கேற்பு
புனித வெள்ளியையொட்டி கிறிஸ்தவ ஆலயங்களில் சிறப்பு பிரார்த்தனை நடந்தது. சிலுவை பாதை வழிபாட்டில் கிறிஸ்தவர்கள் கலந்துகொண்டனர்.
வால்பாறை
புனித வெள்ளியையொட்டி கிறிஸ்தவ ஆலயங்களில் சிறப்பு பிரார்த்தனை நடந்தது. சிலுவை பாதை வழிபாட்டில் கிறிஸ்தவர்கள் கலந்துகொண்டனர்.
ஆராதனை வழிபாடு
ஏசு கிறிஸ்து சிலுவையில் அறையப்பட்ட நாளை புனித வெள்ளியாகவும், அவர் உயிர்த்தெழுந்த நாளை ஈஸ்டர் பண்டிகையாகவும் கிறிஸ்தவர்கள் அனுசரித்து வருகிறார்கள். அதன்படி நேற்று புனித வெள்ளி என்பதால் கிறிஸ்தவ ஆலயங்களில் சிறப்பு பிரார்த்தனை நடந்தது. இந்த பிரார்த்தனையில் ஏரளாமான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டனர். அத்துடன் இந்த ஆலய வளாகத்தில் சிலுவை பாதை ஊர்வலமும் நடந்தது. ஏசு கிறிஸ்து சிலுவையில் அறையப்படுவதற்கு முன்பு அவர் சிலுவையை சுமந்து கொண்டு கொல்கதா என்ற மலைக்கு சென்றபோது, 14 இடங்களில் நின்று சென்றதாக விவிலியம் கூறுகிறது. இந்த ஆலய வளாகத்தில் கிறிஸ்தவர்கள் சிலுவை பாதை ஊர்வலமாக சென்றபோது 14 இடங்களில் நின்று பாடல்களை பாடியும், பிரார்த்தனை செய்தபடியும் தியானித்தனர். அதுபோன்று வால்பாறை உட்பட அனைத்து எஸ்டேட் பகுதிகளிலும் உள்ள சி.எஸ்.ஐ. தேவாலயங்களில் ஏசு கிறிஸ்துவை சிலுவையில் அறையப்பட்டு அவர் பேசிய 7 வார்த்தைகளை குறித்து சிறப்பு விளக்கங்களோடு ஆராதனை வழிபாடு நடைபெற்றது.
சிலுவை பாதை ஊர்வலம்
இதேபோல் வால்பாறை, அய்யர்பாடி, முடீஸ், சோலையாறு நகர் ஆகிய இடங்களில் உள்ள கத்தோலிக்க தேவாலயங்களில் திவ்விய நற்கருணை ஸ்தாபக வழிபாடு, சிலுவை பாதை வழிபாடு, திருச்சிலுவை ஆராதனை ஆகிய சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றது. வழிபாடுகளில் கலந்து கொண்டவர்களுக்கு பரிகார கஞ்சி வழங்கப்பட்டது.
சிறப்பாக முடீஸ் புனித அந்தோனியார் ஆலய பங்கு மக்கள் சோலையாறு எஸ்டேட் பகுதியில் உள்ள சிலுவை மலையில் பங்கு குரு மரிய அந்தோணிசாமி தலைமையில் சிலுவை பாதை வழிபாடு நடத்தினார்கள்.
புனித வனத்துச்சின்னப்பர் ஆலயம்
இதேபோல் 100 ஆண்டு பழமையான அய்யர்பாடி புனித வனத்துச்சின்னப்பர் ஆலய சிலுவை மலையில் பக்தர்கள் பங்கு குரு ஆனந்த குமார் தலைமையில் சிலுவை சுமந்து படி குடும்பத்துடன் மலையேறி ஏசு கிறிஸ்துவின் சிலுவை பாடுகளின் 14 நிலைகளில் சிறப்பு ஜெபமாலை வழிபாடு, இறை இறக்க வழிபாடு நடத்தினார்கள். கோவை மாவட்டம் கேரளாவின் பல்வேறு ஊர்களில் இருந்து வந்திருந்த ஏராளமான கிறிஸ்தவர்கள் சிலுவை மலையில் சிலுவை பாதை வழிபாட்டில் கலந்து கொண்டனர்.