கிறிஸ்துமஸ் குடில் சொரூபங்கள் தயாரிப்பு பணி தீவிரம்
தூத்துக்குடியில் கிறிஸ்துமஸ் குடில் சொரூபங்கள் தயாரிப்பு பணி தீவிரமாக நடந்து வருகிறது.
ஏசு நாதர் பிறந்த தினமான டிசம்பர் 25-ந் தேதியை கிறிஸ்துமஸ் பண்டிகையாக கிறிஸ்தவர்கள் உலக முழுவதும் கொண்டாடி வருகிறார்கள். கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு கிறிஸ்தவர்கள் வீடுகளில் குடில்கள் அமைத்து அந்த குடில்களில் ஏசுநாதர் சிலைகள் வைத்து மின் விளக்குகளால் அலங்கரித்து இருப்பார்கள். கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு தூத்துக்குடி சுந்தரவேல்புரத்தில் கிறிஸ்துமஸ் குடில் சொரூபங்கள் விற்பனைக்காக தயார் செய்யப்பட்டு வருகிறது. இங்கு ஏசு பாலன், மாதா, சூசையப்பர், இடையர்கள், ராஜாக்கள், ஆடுகள், மாடுகள், கழுதை, ஒட்டகம், வானதூதர் உள்ளிட்ட 20 வகையான குடில் சொரூபங்கள் தயார் செய்யப்பட்டு வருகிறது. இந்த சொரூபங்கள் பிளாஸ்டர் ஆப் பாரிஸ் கொண்டு தயார் செய்யப்படுகிறது. சொரூபங்கள் தயார் செய்யப்பட்டு காய வைக்கப்படுகிறது. பின்னர் சொரூபங்களுக்கு வண்ணம் தீட்டப்படுகிறது. இதுகுறித்து கிறிஸ்துமஸ் குடில் சொரூபங்கள் தயாரித்து விற்பனை செய்யும் நிரோஷனிடம் கேட்ட போது, நாங்கள் கிறிஸ்துமஸ் குடிலுக்கான சொரூபங்கள் தயாரித்து விற்பனை செய்து வருகிறோம். ஒரு குடில் அமைக்க 16 மற்றும் 18 சொரூபங்கள் கொண்ட செட்டுகளாக விற்பனைக்கு வருகிறது. 16 சொரூபங்கள் ரூ.1000-க்கும், 18 சொரூபங்கள் ரூ.2 ஆயிரம் முதல் ரூ.2 ஆயிரத்து 500 வரையும் விற்பனை செய்து வருகிறோம். நாங்கள் தயாரிக்கும் சொரூபங்களை திருச்சி, மதுரை மற்றும் உள்ளூரிலும் விற்பனை செய்து வருகிறோம். தற்போது வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட சொரூபங்களை மக்கள் அதிகம் வாங்குகின்றனர். இதனால் விற்பனை மந்தமாக உள்ளது. அதே போன்று இறக்குமதி செய்யப்பட்ட சொரூபங்களின் விலை அதிகமாக இருப்பதால், எங்கள் சொரூபங்களின் விற்பனை ஓரளவுக்கு நடந்து வருகிறது என்று கூறினார்.