சூலக்கல் மாரியம்மன் கோவில் தேர்த்திருவிழா


சூலக்கல் மாரியம்மன் கோவில் தேர்த்திருவிழா
x
தினத்தந்தி 9 May 2023 7:00 AM IST (Updated: 9 May 2023 7:00 AM IST)
t-max-icont-min-icon

கிணத்துக்கடவு அருகே சூலக்கல் மாரியம்மன் கோவில் தேர்த்திருவிழா தொடங்கியது. 3 நாட்கள் தேரோட்டம் நடக்கிறது.

கோயம்புத்தூர்

கிணத்துக்கடவு

கிணத்துக்கடவு அருகே சூலக்கல் மாரியம்மன் கோவில் தேர்த்திருவிழா தொடங்கியது. 3 நாட்கள் தேரோட்டம் நடக்கிறது.

தேர்த்திருவிழா

கிணத்துக்கடவு அருகே சூலக்கல்லில் பிரசித்தி பெற்ற மாரியம்மன்-விநாயகர் கோவில் உள்ளது. இக்கோவிலில் ஆண்டுதோறும் தேர்த்திருவிழா வெகு விமரிசையாக நடைபெறுவது வழக்கம். அதேபோல் இந்த ஆண்டு தேர்த்திருவிழா நேற்று தொடங்கியது. இதையொட்டி காலை 9.30 மணிக்கு சூலக்கல் ஆற்றில் இருந்து மூங்கில் கம்பம் மேளதாளம் முழங்க பக்தர்கள் புடை சூழ ஊர்வலமாக கொண்டு வரப்பட்டது.

பின்னர் சூலக்கல் மாரியம்மன் கோவிலில் சிறப்பு பூஜை நடைபெற்று, முகூர்த்தக்காய் உடைக்கும் நிகழ்ச்சி நடந்தது. இந்த நிகழ்ச்சியில் சூலக்கல் சுற்றியுள்ள கிராமங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டனர். இன்று (செவ்வாய்க்கிழமை) காலை 9 மணிக்கு வேல் புறப்பாடு மற்றும் பூச்சாட்டு விழா நடைபெறுகிறது.

திருக்கல்யாணம்

வருகிற 15-ந் தேதி இரவு 9 மணிக்கு கிராம சாந்தி, வாஸ்து சாந்தி பூஜை, 16-ந் தேதி இரவு 9 மணிக்கு கம்பம் நடும் நிகழ்ச்சி, பூவோடு எடுத்து வருதல், 17-ந் தேதி காலை 9 மணிக்கு யாகசாலை ஆரம்பம் நிகழ்ச்சி, கொடியேற்ற விழா, இரவு 9 மணிக்கு மாரியம்மன் சிம்ம வாகனத்தில் அம்மன் திருவீதி உலா, பக்தர்கள் பூவோடு எடுத்துவரும் நிகழ்ச்சி நடக்கிறது.

18-ந் தேதி முதல் 23-ந் தேதி வரை தினமும் காலை, இரவு நேரங்களில் சூலக்கல் மாரியம்மன் திருவீதி உலாவும், பூவோடு எடுத்துவரும் நிகழ்ச்சியும், 24-ந் தேதி காலை 6 மணிக்கு மாவிளக்கு மற்றும் பொங்கல் வைக்கும் நிகழ்ச்சி, அம்மனுக்கு திருக்கல்யாணம், 25, 26, 27-ந் தேதிகளில் மாலை 4 மணிக்கு திருத்தேர் வடம் பிடித்தல் நிகழ்ச்சி நடைபெறுகிறது. 28-ந் தேதி மதியம் 12 மணிக்கு சூலக்கல் மாரியம்மனுக்கு மகா அபிஷேகத்துடன் அன்னதானம் நடக்கிறது. விழாவிற்கான ஏற்பாடுகளை சூலக்கல் மாரியம்மன்-விநாயகர் கோவில் செயல் அலுவலர் கந்தசாமி மற்றும் சூலக்கல் ஊர் பொதுமக்கள் செய்து வருகின்றனர்.


Next Story