குருத்தோலை ஞாயிறையொட்டி தேவாலயங்களில் சிறப்பு பிரார்த்தனை-பவனியில் திரளான கிறிஸ்தவர்கள் பங்கேற்பு
தர்மபுரி:
குருத்தோலை ஞாயிறையொட்டி தேவாலயங்களில் சிறப்பு பிரார்த்தனை நடந்தது. முன்னதாக நடந்த பவனியில் திரளான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டனர்.
குருத்தோலை ஞாயிறு
இயேசு கிறிஸ்து சிலுவையில் அறையப்படுவதற்கு முன்பு 40 நாட்கள் உபவாசம் மேற்கொண்டதாக கிறிஸ்தவர்களின் புனித நூலான பைபிளில் கூறப்பட்டுள்ளது. இதையடுத்து அவர் கழுதை குட்டியின் மீது அமர்ந்தபடி, ஜெருசலேம் நகருக்கு வந்தார். அப்போது அங்கிருந்த மக்கள் 'தாவீதின் மைந்தனுக்கு ஓசன்னா' என்று முழங்கியபடி அவரை வரவேற்றனர்.
மேலும் துணிகளை தரையில் விரித்தும், மரக்கிளைகள், குருத்தோலைகளை கையில் ஏந்தியபடியும் அவருக்கு உற்சாகமாக வரவேற்பு அளித்தனர். இந்த நிகழ்வை நினைவு கூறும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் ஈஸ்டர் பண்டிகைக்கு முந்தைய ஞாயிற்றுக்கிழமை குருத்தோலை ஞாயிறாக கடைபிடிக்கப்படுகிறது.
சிறப்பு பிரார்த்தனை
குருத்தோலை ஞாயிறையொட்டி கிறிஸ்தவ தேவாலயங்களில் சிறப்பு பிரார்த்தனை நடத்தப்படும். அதற்கு முன்பாக குருத்தோலை பவனியும் நடைபெறும். இந்த ஆண்டு வருகிற 9-ந் தேதி ஈஸ்டர் பண்டிகை கொண்டாடப்பட உள்ளது. இதை முன்னிட்டு நேற்று குருத்தோலை ஞாயிறு கடைபிடிக்கப்பட்டது. குருத்தோலை ஞாயிறையொட்டி தர்மபுரி மாவட்டத்தில் உள்ள தேவாலயங்களில் சிறப்பு பிரார்த்தனை நடந்தது.
தர்மபுரி தூய இருதய ஆண்டவர் பேராலயம் சார்பில் குருத்தோலை ஞாயிறையொட்டி பவனி நடைபெற்றது. தர்மபுரி-சேலம் மெயின் ரோடு மதுராபாய் திருமண மண்டபம் அருகில் இருந்து தொடங்கிய இந்த பவனிக்கு பங்குத்தந்தை அருள்ராஜ் தலைமை தாங்கினார்.
திருப்பலி
சமூக சேவை மைய இயக்குனர் பங்குத்தந்தை ஏசுதாஸ் முன்னிலை வகித்தார். இந்த ஊர்வலம் அன்னசாகரம் சாலை வழியாக சென்று புதிதாக கட்டப்பட்டு வரும் தூய இருதய ஆண்டவர் பேராலயம் வளாகத்தில் நிறைவடைந்தது. இந்த ஊர்வலத்தில் திரளான கிறிஸ்தவர்கள் குருத்தோலையுடன் பங்கேற்றனர். தொடர்ந்து குருத்தோலை ஞாயிறு சிறப்பு திருப்பலி நடைபெற்றது.
பொம்மிடியில் புனித அந்தோணியார் தேவாலயத்தில் குருத்தோலை பவனி பங்கு தந்தை ஆரோக்கிய ஜேம்ஸ் தலைமையில் நடந்தது. தொடர்ந்து தேவாலயத்தில் சிறப்பு திருப்பலி நடந்தது. இதேபோன்று தர்மபுரி மாவட்டத்தின் பல்வேறு இடங்களிலும் குருத்தோலை ஞாயிறு ஊர்வலம் மற்றும் சிறப்பு திருப்பலி நடைபெற்றது. இதில் அந்தந்த பகுதியை சேர்ந்த ஏராளமான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டனர்.