சுத்தமல்லி சுந்தரேஸ்வரர் கோவில் மகா கும்பாபிஷேகம்


சுத்தமல்லி சுந்தரேஸ்வரர் கோவில் மகா கும்பாபிஷேகம்
x

சுத்தமல்லி சுந்தரேஸ்வரர் கோவில் மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது.

அரியலூர்

உடையார்பாளையம்

அரியலூர் மாவட்டம், உடையார்பாளையம் அருகே உள்ள சுத்தமல்லி கிராமத்தில் சுமார் ஆயிரம் ஆண்டுகள் பழமையான சுகந்த குந்தளாம்பிகை சமேத சுந்தரேஸ்வரர் கோவில் அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம் நேற்று நடந்தது. சுத்தமல்லி கிராமத்தில் சோழர்கள் காலத்தில் கட்டப்பட்டு மிக நீண்டகாலமாக பராமரிப்பு இல்லாமல் சிதிலமடைந்த நிலையில் இக்கோவில் காணப்பட்டது. கிராம முக்கியஸ்தர்கள், நாட்டாமைகாரர்கள் கோவில் கும்பாபிஷேகம் செய்ய முடிவு செய்து திருப்பணிகளை மேற்கொண்டனர். திருப்பணிகள் நிறைவடைந்த நிலையில் கடந்த 5-ந் தேதி விக்னேஸ்வர பூஜையுடன் கும்பாபிஷேக யாகசாலை நிகழ்ச்சிகள் தொடங்கின. கடந்த 6-ந்் தேதி தீர்த்தசங்கிரகணம் நடந்தது. 7-ந் தேதி விக்னேஸ்வர பூஜையுடன் வாஸ்துசாந்தி செய்யப்பட்டு முதல் கால யாகசாலை பூஜைகள் நடந்தது. நேற்று முன்தினம் காலை 7 மணி அளவில் கணபதி பூஜையுடன் 2-ம் கால யாக சாலை பூஜைகள் நடந்து, மாலை 5 மணி அளவில் 3-ம் கால யாகசாலை பூஜைகள் நடந்தது. நேற்று காலை 5 மணி அளவில் லட்சுமி கணபதி பூஜை உள்பட பல்வேறு பூஜைகள் நடந்தன. தொடர்ந்து கடங்கள் புறப்பாடு செய்யப்பட்டு 8.45 மணிக்கு ராஜகோபுரம் விமானங்கள் ஆகியவற்றுக்கு மகா கும்பாபிஷேகம் நடந்தது. தொடர்ந்து 9 மணிக்கு மூலஸ்தான மூர்த்திகளுக்கு அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம் நடந்தது. தொடர்ந்து மகா அபிஷேகம் மங்கள தீபாராதனை ஆகியவை நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். காவல்துறை, தீயணைப்புத்துறை, ஊரக வளர்ச்சித்துறை உள்ளிட்ட அதிகாரிகள் கும்பாபிஷேகத்திற்கு தேவையான அனைத்து முன்னெச்சரிக்கை, பாதுகாப்பு மற்றும் சுகாதார நடவடிக்கைகளையும் மேற்கொண்டனர். விழா ஏற்படுகளை ஊராட்சி மன்ற தலைவர் சக்திவேல், முன்னாள் மாநில வன்னியர் சங்கத் துணைத் தலைவர் கோகுல், தா.பழூர் துணை ஜேர்மன் கண்ணன், நில நீர் வல்லுநர் தர்மலிங்கம், மாதவ் லாஜிஸ்டிக்ஸ் வெங்கடேசன், அரங்க நக்கீரன், கண்ணன், மனோகரன், நியூ சுதாகர் மெடிக்கல் பாஸ்கர், சந்தோஷ்குமார் உள்ளிட்ட விழா கமிட்டி பொறுப்பாளர்கள் செய்திருந்தனர்.


Next Story