மணிலா பயிரை தாக்கும் இலை சுருட்டு பூச்சி
மணிலா பயிரைத் தாக்கும் இலை சுருட்டு பூச்சிகளால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர்.
வாணாபுரம்
மணிலா பயிரைத் தாக்கும் இலை சுருட்டு பூச்சிகளால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர்.
மணிலா பயிர்
வாணாபுரம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் நெல், கம்பு, மக்காச்சோளம், கேழ்வரகு, மணிலா, உளுந்து மற்றும் பருவ கால பயிரான காய்கறி மற்றும் பூக்கள் வகையான பயிர்களை விவசாயிகள் பயிரிடப்பட்டு பராமரித்து வருகின்றனர்.
வாணாபுரம், தச்சம்பட்டு, வெறையூர், சின்னகல்லப்பாடி, பெரியகல்லப்பாடி, பழையனூர், மழுவம்பட்டு, சதாகுப்பம், அகரம் பள்ளிப்பட்டு, பேராயம்பட்டு, தலையாம்பள்ளம், நரியப்பட்டு உள்ளிட்ட பகுதிகளில் விவசாயிகள் மணிலா பயிரிட்டு உள்ளனர்.
இலை சுருட்டு பூச்சி
இந்த மணிலா பயிர்களில் இலை சுருட்டு பூச்சி தாக்கப்படுவதனால் செடிகள் வளர்ச்சி குறைவாகவும் இலைகள் சுருள் போல் காணப்படுகிறது. இதன் காரணமாக மணிலா பயிர்கள் அதிகளவில் பாதிக்கப்பட்டு, வளர்ச்சி குறைந்து வருவதாகவும் விவசாயிகள் வேதனையுடன் தெரிவித்தனர்.
இதுகுறித்து விவசாயிகள் கூறுகையில் கடந்த 2 மாதங்களுக்கு முன்பு நூற்றுக்கணக்கான ஏக்கர் பரப்பளவில் மணிலா விதைத்து அதனை பராமரித்து வந்தோம்.
தற்போது பூக்கள் அதிகளவில் வைத்திருக்கும் நிலையில் மணிலாவின் மேல் பகுதியில் உள்ள இலைகள் முழுவதும் சுருள் போல் காணப்படுகிறது. இந்த இலைகளை பிரித்துப் பார்த்தால் அதில் அதிகளவில் பூச்சிகள் உள்ளது. இதன் காரணமாக மணிலா வளராமல் உள்ளது.
எனவே இலை சுருட்டு பூச்சிகளை கட்டுப்படுத்த சம்பந்தப்பட்ட வேளாண் அதிகாரிகள் விவசாய நிலங்களுக்கு நேரடியாக சென்று ஆய்வு செய்து பூச்சினை கட்டுப்படுத்த தெளிக்க வேண்டிய மருந்துகள் குறித்து ஆலோசனை வழங்க வேண்டும் என்றனர்.