ஜெயிலர் பட தியேட்டர் மீது கல் வீசியதில் ஏ.டி.எம். மைய கண்ணாடி சேதம்


திருப்பூரில் ஜெயிலர் திரைப்படம் திரையிடப்பட்ட தியேட்டர் மீது கல்வீசியதில் ஏ.டி.எம். மைய கண்ணாடி உடைந்து நொறுங்கியது. குடிபோதையில் தகராறில் ஈடுபட்ட கல்லூரி மாணவர் உள்பட 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

திருப்பூர்

திருப்பூரில் ஜெயிலர் திரைப்படம் திரையிடப்பட்ட தியேட்டர் மீது கல்வீசியதில் ஏ.டி.எம். மைய கண்ணாடி உடைந்து நொறுங்கியது. குடிபோதையில் தகராறில் ஈடுபட்ட கல்லூரி மாணவர் உள்பட 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

இது பற்றிய விவரம் வருமாறு:-

ஜெயிலர் திரைப்படம்

நடிகர் ரஜினிகாந்த் நடித்த ஜெயிலர் திரைப்படம் கடந்த 10-ந்தேதி தமிழகம் முழுவதும் திரையிடப்பட்டது. இதேபோல் திருப்பூரிலும் பல தியேட்டர்களில் அந்த திரைப்படம் வெளியானது. இந்த நிலையில் திருப்பூரை அடுத்த அவினாசியை சேர்ந்த தன்வீர் (வயது 24) மற்றும் கல்லூரி 3-ம் ஆண்டு மாணவரான லோகநாதன் (19) ஆகிய 2 பேரும் நேற்று முன்தினம் இரவு 10 மணி காட்சிக்கு ஜெயிலர் படம் பார்க்க திருமுருகன்பூண்டியை அடுத்த அம்மாபாளையம் பகுதியில் உள்ள ஒரு தியேட்டருக்கு சென்றுள்ளனர்.

அப்போது தன்வீர், லோகநாதன் ஆகியோர் குடிபோதையில் தியேட்டர் காவலாளி சிவநேசனை தகாத வார்த்தையால் பேசி, தகராறில் ஈடுபட்டதுடன், அவரை தாக்கியதாகவும் தெரிகிறது.

தியேட்டர் மீது கல்வீச்சு

இதுகுறித்து தகவலறிந்த திருமுருகன்பூண்டி போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று தன்வீர், லோகநாதன் ஆகியோரிடம் விசாரணை நடத்தினார்கள். பின்னர் இருவரின் பெற்றோரை வரவழைத்த போலீசார் அவர்களை எச்சரித்து அனுப்பி வைத்தனர்.

அங்கிருந்து புறப்பட்டு சென்ற தன்வீர், லோகநாதன் ஆகியோர் சிறிது நேரத்தில் மீண்டும் அங்கு வந்து, காவலாளி சிவநேசன் மீது உள்ள ஆத்திரத்தில் தியேட்டர் மீது வேகமாக கல் வீசி உள்ளனர். ஆனால் அந்த கல் தியேட்டரை அடுத்து இருந்த பாரத ஸ்டேட் வங்கிக்கு சொந்தமான ஏ.டி.எம். மையத்தின் மீது விழுந்தது.

ஏ.டி.எம். மையம் சேதம்

இதில் அந்த மையத்தின் முன்பக்க கண்ணாடி உடைந்து நொறுங்கியது. இதையடுத்து மீண்டும் போலீசார் அங்கு விரைந்து சென்று தன்வீர், லோகநாதனை பிடித்து பெற்றோருடன் அனுப்பி வைத்தனர். இந்த நிலையில் சம்பந்தப்பட்ட தியேட்டர் மேலாளர் வருண் மற்றும் வங்கி கிளை மேலாளர் கொடுத்த புகாரின் அடிப்படையில் திருமுருகன்பூண்டி போலீசார் வழக்குப் பதிவு செய்து தன்வீர் மற்றும் லோகநாதனை நேற்று கைது செய்து சிறையில் அடைத்தனர்.

திருப்பூரில் ஜெயிலர் திரைப்படம் திரையிடப்பட்ட தியேட்டர் மீது கல் வீசியதில் வங்கி ஏ.டி.எம். மைய கண்ணாடி உடைந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


Related Tags :
Next Story