பட்டியில் ஆட்டை தூக்கிச்சென்ற சிறுத்தை
ஊதியூர் பகுதியில் சுற்றித்திரியும் சிறுத்தை விவசாய தோட்டத்தில் புகுந்து ஆட்டை தூக்கி சென்றது. அதன் அட்டகாசத்தால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். சிறுத்தையை பிடிக்க வேட்டை தடுப்பு பிரிவினரை களத்தில் இறக்க வனத்துறையினர் முடிவு செய்துள்ளனர்.
ஊதியூர் பகுதியில் சுற்றித்திரியும் சிறுத்தை விவசாய தோட்டத்தில் புகுந்து ஆட்டை தூக்கி சென்றது. அதன் அட்டகாசத்தால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். சிறுத்தையை பிடிக்க வேட்டை தடுப்பு பிரிவினரை களத்தில் இறக்க வனத்துறையினர் முடிவு செய்துள்ளனர்.
ஊதியூர்
வனவிலங்குகள் அதன் வாழ்விடத்தை விட்டு வெளியே வந்தால் கால்நடைகளுக்கும், பொதுமக்களுக்கும் சிக்கல்தான்.
அந்த வகையில் எங்கிருந்தோ வழி தவறி வந்த சிறுத்தை கடந்த மார்ச் மாதம் ஊதியூர் மலைபகுதியில் தஞ்சம் புகுந்தது. அதனால் பொதுமக்களும், விவசாயிகளுக்கும் ஏற்படும் தொல்லைக்கு அளவே இல்லை. அந்த சிறுத்தை தனது ஆட்டத்தை மீண்டும் தொடங்கியது. அந்த சிறுத்தை அங்குள்ள விவசாய தோட்டங்களில் புகுந்து ஆடுகளை இரவு நேரங்களில் வேட்டையாடி வந்தது. இதையடுத்து சிறுத்தையை கூண்டு வைத்து பிடிக்க வனத்துறையினர் நடவடிக்கை எடுத்தனர். ஆனால் சிறுத்தை கூண்டுக்குள் சிக்கவில்லை. இதனால் வனத்துறையினர் முயற்சி பலன் அளிக்கவில்லை.
ஆட்டை தூக்கி சென்ற சிறுத்தை
இந்த நிலையில் ஊதியூர் அருகே உள்ள ஆத்திக்காடு பகுதியை சேர்ந்த விவசாயி கந்தசாமி தனது தோட்டத்தில் 30 ஆடுகளும், சில மாடுகள் மற்றும் கோழிகள் வளர்த்து வருகிறார். இவர் கடந்த 25-ந்தேதி மாலை ஆடுகளை பட்டியில் அடைத்துவிட்டு இரவில் அங்குள்ள தனது வீட்டில் தூங்கி கொண்டு இருந்துள்ளார்.
நள்ளிரவு நேரத்தில் ஆடுகளின் அலறல் சத்தம் கேட்டு எழுந்த கந்தசாமி வீட்டின் கதவை திறந்து ஆட்டுபட்டியை பார்த்துள்ளார்.அப்போது சிறுத்தை ஒன்று 10 கிலோ எடை கொண்ட ஆடு ஒன்றை தன்வாயில் கவ்விக் கொண்டு அங்கிருந்து ஓடி சென்று மறைந்துள்ளது.
உடனே அவர் இதுகுறித்து வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தார். உடனே விரைந்து வந்த வனத்துறையினர் அப்பகுதியில் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். எனினும் சிறுத்தை அவர்கள் கண்ணில் தென்படவில்லை.
இதுகுறித்து அப்பகுதி பொதுமக்கள் கூறியதாவது:-
வேட்டை தடுப்பு பிரிவு
கடந்த 6 மாத காலமாக இந்த சிறுத்தை கூண்டில் சிக்காமல் போக்கு காட்டி வருகிறது. தொடர்ந்து ஆடுகளை வேட்டையாடுவது,தோட்டம் மற்றும் வீடுகளில் உள்ள தண்ணீர் தொட்டிகளில் வந்து தண்ணீர் குடித்து செல்வதை வழக்கமாக கொண்டுள்ளது. இதனால் நாங்கள் பொருளாதாரத்திலும், மனதளவிலும் பாதிக்கப்பட்டு உள்ளோம். தற்போது ஆடுகளை வேட்டையாடி வரும் சிறுத்தை மனிதர்களை வேட்டையாடும் முன்பு பிடிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதுகுறித்து வனத்துறையினர் கூறும்போது "கூண்டுக்குள் சிக்காத சிறுத்தை பயந்த சுபாவம் கொண்டதாக தெரிகிறது. இதுபோன்றவை மனிதர்களை நெருங்காது என்றபோதிலும் பொதுமக்கள் பாதுகாப்புடன் இருக்க வேண்டும். விரைவில் உடுமலையில் இருந்து வேட்டை தடுப்பு பிரிவு வரவழைக்கப்பட்டு இந்த சிறுத்தை பிடிக்கப்படும்" என்றனர்.
ஊதியூர்மலையடிவார பகுதியில் செல்பவர்கள் ஆங்காங்கே மரங்கள் அசைந்தாலும் அது சிறுத்தையாக இருக்குமோ? என்ற அச்ச உணர்வு அவர்களை ஆட்டிப்டைக்கிறது.