பொங்கலூர் பகுதியில் சிறுத்தை நடமாட்டமா?
பொங்கலூர் பகுதியில் சிறுத்தை நடமாட்டம் உள்ளதாக கூறப்பட்டதால் வனத்துறையினர் ஆய்வு நடத்தி வருகிறார்கள்.
பொங்கலூர் அருகே உள்ள கள்ளிப்பாளையத்தை அடுத்த தண்ணீர் பந்தல் பகுதியில் நேற்று காலை சிறுத்தை ஒன்று சாலையை கடந்து சென்றதாக ஒருவர் தகவல் தெரிவித்தார். இந்த தகவல் அந்த பகுதியில் காட்டு தீ போல் பரவியது. இது குறித்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த காமநாயக்கன்பாளையம் போலீசார் வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். அதைத்ெதாடர்ந்து உடனடியாக அவர்களும் அங்கு வந்தனர். போலீசார் மற்றும் வனத்துறையினர் சிறுத்தை நடமாட்டம் இருப்பதாக கூறிய பகுதியான கள்ளிப்பாளையம், தண்ணீர் பந்தல், புத்தெரிச்சல், வலையபாளையம் ஆகிய பகுதிகளில் சிறுத்தை நடமாட்டத்திற்கான அறிகுறிகள் தென்படுகிறது என ஆய்வு மேற்கொண்டனர். மேலும் சிறுத்தையின் கால் தடங்கள் அந்த பகுதியில் பதிவாகி உள்ளதா? என்றும் ஆய்வு மேற்கொண்டனர். ஆனால் அதற்கான எந்த அறிகுறியும் இருப்பதாக தெரியாததால் தொடர்ந்து இதுகுறித்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள். ஏற்கனவே திருப்பூர் மாவட்டம் ஊதியூர் மலையடிவாரப்பகுதியில் சிறுத்தை நடமாட்டம் உள்ளது. இது தோட்டத்துக்குள் புகுந்து ஆடு, மாடுகளை கொன்று வருகிறது. கடந்த 8 மாதங்களாக வனத்துறையினர் பிடியில் சிக்காமல் போக்குகாட்டி வருகிறது. ஒருவேளை அந்த சிறுத்தை இந்தபகுதிக்கு வந்து விட்டதா என்ற சந்தேகமும் மக்கள் மத்தியில் உள்ளது. சிறுத்தை நடமாட்டம் இருப்பதாக வந்த தகவலால் பொதுமக்களிடையே பெரிதும் அச்சம் ஏற்பட்டுள்ளது.