சேதமான தார்சாலையை சீரமைக்கக்கோரி பொக்லைன் எந்திரத்தை சிறைபிடித்து பொதுமக்கள் போராட்டம்


சேதமான தார்சாலையை சீரமைக்கக்கோரி பொக்லைன் எந்திரத்தை சிறைபிடித்து பொதுமக்கள் போராட்டம்
x

சேதமான தார்சாலையை சீரமைக்கக்கோரி பொக்லைன் எந்திரத்தை சிறைபிடித்து பொதுமக்கள் போராட்டம்

ஈரோடு

சத்தியமங்கலம்

சத்தியமங்கலம் அருகே செண்பகப்புதூர் ஊராட்சிக்குட்பட்டது குந்திபொம்மனூர். இந்த கிராமத்தில் இருந்து சென்னப்பனூர், குந்தி பொம்மனூர் ஆகிய கிராமங்களின் வழியாக மேட்டூர் பிரிவு வரை செல்லும் தார்சாலை சேதமடைந்திருந்தது. இந்த சாலையை சீரமைக்க முதல்-அமைச்சரின் கிராம சாலை மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ.65 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டது. இதைத்தொடர்ந்து நேற்று காலை பொக்லைன் எந்திரம் மூலம் பணி தொடங்கியது. அப்போது சில இடங்களில் உள்ள தார்சாலையை மட்டும் தோண்டி பணி செய்தார்கள். சில இடங்களில் உள்ள தார்சாலையை அப்படியே விட்டுவிட்டனர். இதனால் ஆத்திரம் அடைந்த அந்த பகுதி பொதுமக்கள் அங்கு திரண்டனர். பின்னர் தார்சாலை முழுவதையும் அகற்றிவிட்டு சீரமைத்து தர வேண்டும் என கூறி பொக்லைன் எந்திரத்தை சிறைபிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதுபற்றிய தகவல் கிடைத்ததும் சத்தியமங்கலம் ஊராட்சி ஒன்றிய ஆணையாளர் பிரேம்குமார், ஒன்றிய வட்டார வளர்ச்சி அதிகாரி அப்துல் வஹாப், முன்னாள் எம்.எல்.ஏ. பி.எல்.சுந்தரம், ஒன்றிய கவுன்சிலர் வி.என்.சின்னச்சாமி, இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் ஒன்றிய செயலாளர் சுடர் நடராஜ் ஆகியோர் அந்த பகுதிக்கு சென்று பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்கள்.

அப்போது, வருகிற 14-ந் தேதி (அதாவது நாளை) இது பற்றி சத்தியமங்கலம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் பேச்சுவார்த்தை நடத்தி நடவடிக்கை எடுக்கப்படும்' என்று உறுதி அளித்தனர். அதை ஏற்றுக்கொண்ட பொதுமக்கள் அங்கு இருந்து கலைந்து சென்றார்கள். இதையடுத்து தார்சாலை சீரமைக்கும் பணி தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டது.

இதனால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.


Next Story