குப்பைகளை கொட்டி, எரிப்பதை கண்டித்து சிதம்பரத்தில் பொதுமக்கள் சாலை மறியல்
குப்பைகளை கொட்டி, எரிப்பதை கண்டித்து சிதம்பரத்தில் பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
சிதம்பரம்,
சிதம்பரத்தில் இருந்து குமராட்சி செல்லும் சாலை ஓமக்குளம் பகுதியில் குப்பைகள் கொட்டப்பட்டு எரிக்கப்படுகின்றன. இதனால் அப்பகுதியில் அதிகளவில் புகை மூட்டம் ஏற்படுவதால், பொதுமக்களுக்கு கண் எரிச்சல், மூச்சுத்திணறல் போன்ற பாதிப்புகள் ஏற்படுகிறது. இதுகுறித்து அதிகாரிகளிடம் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை என்று தெரிகிறது. இதனால் ஆத்திரமடைந்த அப்பகுதி பொதுமக்கள் 30-க்கும் மேற்பட்டோர் நேற்று இரவு சிதம்பரத்தில் இருந்து குமராட்சி செல்லும் சாலையில் திடீரென மறியலில் ஈடுபட்டனர்.
இதுபற்றி தகவல் அறிந்ததும் சிதம்பரம் நகராட்சி ஆணையாளர் பிரபாகரன், நகர போலீஸ் இன்ஸ்பெக்டர் ஆறுமுகம் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து சாலை மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது இதுகுறித்து நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்ததன் பேரில் பொதுமக்கள் மறியலை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர். இதனால் இப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டதுடன், போக்குவரத்து பாதிப்பும் ஏற்பட்டது.