குடிநீர் பிரச்சினையை தீர்க்க கோரி தூத்துக்குடியில் பொதுமக்கள் சாலை மறியல் - போக்குவரத்து பாதிப்பு


குடிநீர் பிரச்சினையை தீர்க்க கோரி தூத்துக்குடியில் பொதுமக்கள் சாலை மறியல் - போக்குவரத்து பாதிப்பு
x

குடிநீர் பிரச்சினையை தீர்க்க கோரி தூத்துக்குடியில் பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

தூத்துக்குடி,

நெல்லை, தூத்துக்குடி, தென்காசி போன்ற மாவட்டங்களில் போதிய அளவு பருவமழை பெய்யாததால் குடிநீர் தட்டுப்பாடு நிலவும் சூழல் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் தற்போது தாமிரபரணி ஆற்றில் தண்ணீரும் குறைவான அளவே வருவதால் 500-க்கும் மேற்பட்ட குக்கிராமங்களில் குடிநீர் விநியோகம் தடைபட்டுள்ளதாக தெரிகிறது.

இதற்கிடையில் தாமிரபரணி ஆற்றில் வல்லநாடு பகுதியில் இருந்து 3-வது மற்றும் 4-வது பைப் லைன் திட்டம் மூலம் தூத்துக்குடி மாநகராட்சி பகுதிகளுக்கு குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. ஆனால் வல்லநாடு மற்றும் அதன் சுற்று வட்டாரப்பகுதியில் உள்ள 50-க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு கடந்த 1 மாதமாக முறையான குடிநீர் வழங்கப்படவில்லை என்று கூறப்படுகிறது.

இதனால் ஆத்திரமடைந்த வல்லநாடு பகுதியைச் சேர்ந்த 100-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் இன்று காலை காலிக்குடங்களுடன் வல்லநாடு பஜார் பகுதியில் நெல்லை-தூத்துக்குடி நான்கு வழிச்சாலையில் சாலை மறியலில் ஈடுபட்டனர். இது குறித்து தகவல் அறிந்ததும் முறப்பநாடு போலீசார் விரைந்து சென்று அவர்களிடம் பேச்சுவார்த்தை ஈடுபட்டனர். ஆனால் பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படாததை தொடர்ந்து அவர்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் இருபுறமும் சுமார் 2 கிலோ மீட்டர் தூரத்திற்கு வாகனங்கள் அணிவகுத்து நிற்கின்றன.

போக்குவரத்து பாதிப்பால் பள்ளி, கல்லூரி மற்றும் பணிகளுக்கு செல்பவர்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர். சுமார் ஒன்றரை மணி நேரத்திற்கும் மேலாக இந்த போராட்டம் என்பது தொடர்ந்து நடைபெற்று வருகிறது. தொடர்ந்து போலீசார் அவர்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகின்றனர்.


Next Story