சுகாதார சீர்கேட்டை கண்டித்து பொதுமக்கள் சாலை மறியல்


சுகாதார சீர்கேட்டை கண்டித்து பொதுமக்கள் சாலை மறியல்
x

வெறையூர் அருகே சுகாதார சீர்கேட்டை கண்டித்து பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

திருவண்ணாமலை

வெறையூர் அருகே சுகாதார சீர்கேட்டை கண்டித்து பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

அடிப்படை வசதிகள் இல்லை

திருவண்ணாமலை ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்டது ஆனானந்தல் கிராமம். இங்கு வடக்குதெரு, தெற்குதெரு, கோவில் வீதி உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனர்.

இந்த பகுதியில் அடிப்படை வசதிகள் இல்லாததால் பொதுமக்கள் சம்பந்தப்பட்ட ஊராட்சி நிர்வாகத்திற்கு பலமுறை புகார் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது. மேலும் அப்பகுதியில் குடிநீர் வசதிகள் மற்றும் அடிப்படை வசதிகள் எதுவும் இல்லாததால் கடும் சிரமப்பட்டு வந்தனர்.

சாலை மறியல்

இந்த நிலையில் நேற்று ஆனானந்தல்-வெறையூர் சாலையில் திடீரென பொதுமக்கள் மறியலில் ஈடுபட்டனர். அப்போது பொதுமக்கள் கூறுகையில், எங்கள் பகுதிக்கு எந்த விதமான அடிப்படை வசதிகளும் செய்து கொடுக்கப்படவில்லை. தெருக்களில் ஆங்காங்கே கழிவுநீர் வழிந்து ஓடுவது மட்டுமல்லாமல் சுகாதார சீர்கேடும் ஏற்பட்டு வருகிறது.

இதுகுறித்து அதிகாரிகளுக்கு பலமுறை புகார் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. எனவே உடனடியாக குடிநீர் வசதி ஏற்படுத்தி தருவது மட்டுமல்லாமல் அடிப்படை வசதிகளை செய்து கொடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறினர்.

போக்குவரத்து பாதிப்பு

தகவல் அறிந்து வந்த வெறையூர் போலீசார் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி சாலை மறியலில் ஈடுபட்டவர்களை கலைய செய்தனர். இதனால் அந்த பகுதியில் ஒரு மணி நேரத்துக்கும் மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.


Next Story