மின்வாரியத்தை கண்டித்து பொதுமக்கள் சாலை மறியல்
சுசீந்திரம் அருகே மின்சாரம் தாக்கி மாணவன் படுகாயம் அடைந்ததை தொடர்ந்து, கொட்டும் மழையில் பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். அவர்களை அப்புறப்படுத்த வந்த போலீசாருடன் தள்ளு-முள்ளு ஏற்பட்டது.
சுசீந்திரம்:
சுசீந்திரம் அருகே மின்சாரம் தாக்கி மாணவன் படுகாயம் அடைந்ததை தொடர்ந்து, கொட்டும் மழையில் பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். அவர்களை அப்புறப்படுத்த வந்த போலீசாருடன் தள்ளு-முள்ளு ஏற்பட்டது.
மாணவன் படுகாயம்
சுசீந்திரம் பேரூராட்சிக்கு உட்பட்ட பரப்புவிளை பகுதியில் சுமார் 300 குடும்பத்தினர் வசித்து வருகிறார்கள். இந்த பகுதியில் திடக்கழிவு மேலாண்மை திட்டத்தின் கீழ் ரூ.70 லட்சம் செலவில் குப்பையை பிரித்து உரமாக்குவதற்கான பணிகள் நடந்து வந்தது. இதற்கு அப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.
இந்த நிலையில் ஒரு வாரத்திற்கு முன்பு அதற்கான கட்டிடத்திற்கு மின் இணைப்பு கொடுக்க வந்த பணியாளர் மின்கம்பத்தில் மின் வயரை சொருகி விட்டு சென்று விட்டார். அந்த வயர் கீழே விழுந்தது. இது குறித்து அப்பகுதி மக்கள் மின்வாரியத்துறைக்கும் தகவல் தெரிவித்தனர்.
இந்த நிலையில் விடுமுறையையொட்டி நேற்று காலையில் அப்பகுதியில் மாணவர்கள் விளையாடினார்கள். அப்போது மின் வயரை 3 மாணவர்கள் தொட்டனர். இதில் அதே ஊரை சேர்ந்த ஜெயசிங் மகனான 10-ம் வகுப்பு மாணவன் விஷ்வா (வயது 14) மின்சாரம் தாக்கியதில் படுகாயம் அடைந்தான் மாணவனை அப்பகுதி மக்கள் மீட்டு தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். மேலும் இதுகுறித்து மின்வாரிய அதிகாரியிடமும் அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்தும் நடவடிக்கை எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது.
சாலை மறியல்
இதனால் ஆத்திரம் அடைந்த பொதுமக்கள் மதியம் 1 மணியளவில் நாகர்கோவில் -கன்னியாகுமரி தேசிய நெடுஞ்சாலையில் புறவழிச் சாலை பகுதியான ஆசிராமம் ஜங்ஷன் பகுதியில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனால் நாகர்கோவில்-கன்னியாகுமரி இடையே வாகனங்கள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. இரு புறமும் வாகனங்கள் அணிவகுத்து நின்றன. அப்போது மழை கொட்டியது. கொட்டும் மழையிலும் சாலை மறியல் போராட்டம் தொடர்ந்தது.
தள்ளு-முள்ளு
இதுபற்றி தகவல் அறிந்ததும் சுசீந்திரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) கண்ணன் விரைந்து வந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். ஆனால் உடன்பாடு ஏற்படவில்லை. அதைத்தொடர்ந்து கன்னியாகுமரி போலீஸ் துணை சூப்பிரண்டு மகேஷ் குமார் பேச்சுவார்த்தை நடத்தியதிலும் உடன்பாடு ஏற்படவில்லை. அதைத்தொடர்ந்து சாலையில் இருந்து பொதுமக்களை குண்டு கட்டாக அப்புறப்படுத்தும் பணியில் போலீசார் இறங்கினர். இதனால் போலீசார்-பொதுமக்கள் இடையே தள்ளு-முள்ளு ஏற்பட்டது.
ஆனாலும் சாலை மறியலில் ஈடுபட்டவர்களை அப்புறப்படுத்தி போக்குவரத்தை போலீசார் சரி செய்தனர்.
பேச்சுவார்த்தை
அதைத்தொடர்ந்து அகஸ்தீஸ்வரம் தாசில்தார் ராஜேஷ், மின்வாரிய இளநிலை பொறியாளர் பெருமாள், சுசீந்திரம் பேரூராட்சி துணைத்தலைவர் சுப்ரமணிய பிள்ளை, கவுன்சிலர் கதிரேசன், ஊர் தலைவர் பொன்ராஜ், வருவாய் ஆய்வாளர் லெனின் கிராம நிர்வாக அதிகாரி கயல்விழி ஆகியோர் முன்னிலையில் பொதுமக்களிடம் பேச்சு வார்த்தை நடந்தது.
அதைத்தொடர்ந்து சம்பந்தப்பட்ட இடத்தை அதிகாரிகள் பார்வையிட்டனர். குப்பையை பிரித்து உரமாக்குவதற்கான பணிகள் உடனடியாக தடுத்து நிறுத்தப்படுவதுடன், பாதிக்கப்பட்ட மாணவனுக்கு வேண்டிய உதவிகளை அரசு துரிதமாக செயல்படுத்தும் என அதிகாரிகள் அறிவித்தனர். அதைத்தொடர்ந்து பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.