அரசு பஸ்சை சிறைபிடித்து பொதுமக்கள் சாலை மறியல்
வாணியம்பாடி அருகே பள்ளிக்கு அடிப்பட வசதிகள் செய்துதரக்கோரி அரசு பஸ்சை சிறைபிடித்து, சாலை மறியலில் ஈடுபட்டனர்.
வாணியம்பாடி அருகே பள்ளிக்கு அடிப்பட வசதிகள் செய்துதரக்கோரி அரசு பஸ்சை சிறைபிடித்து, சாலை மறியலில் ஈடுபட்டனர்.
பள்ளிக்கட்டிடம் சேதம்
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த அலசந்தாபுரம் கிராமத்தில் அரசு ஆரம்பப் பள்ளி இயங்கி வருகிறது. இந்த பள்ளி கடந்த 50 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டது. பள்ளி கட்டிடம் பாழடைந்துள்ளது. மேலும் மேற்கூறை சேதமடைந்து மழை காலங்களில் மாணவர்கள் கடும் சிரமத்திற்குள்ளாகி வருகின்றனர்.
மேலும் பள்ளி வளாகம் புதர் மண்டி, சுற்றுச் சுவர்கள் இடிந்து விழுந்துள்ளதால் பள்ளி வளாகத்தில் அடிக்கடி பாம்புகள் மற்றும் விஷ பூச்சிகள் புகுந்து விடுவதாக கூறப்படுகிறது. இதனால் உடனடியாக புதிய பள்ளிக் கட்டிடம் கட்டித்தரக்கோரி கிராம மக்கள் பள்ளி கல்வித்துறைக்கு பலமுறை மனு அளித்துள்ளனர். ஆனால் இதுவரையில் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை.
சாலை மறியல்
இதனால் ஆத்திரமடைந்த அலசந்தாபுரம் கிராம மக்கள் பள்ளிக்கு அடிப்படை வசதிகள் செய்து தரக்கோரி வாணியம்பாடி - ஆந்திரா சாலையில் அரசு பஸ்சை சிறைபிடித்து சாலை மறியலில் ஈடுப்பட்டனர். இதுபற்றி தகவல் அறிந்ததும் திம்மாம்பேட்டை போலீசார் விரைந்து சென்று போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினர்.
அப்போது உரிய நடவடிக்கை எடுக்கப்பதாக உறுதியளித்ததின் பேரில் சாலை மறியலை கைவிட்டு பொதுமக்கள் கலைந்து சென்றனர். மறியல் போராட்டத்தால் அப்பகுதியில் சுமார் ஒருமணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.