வடிகால் வசதிகேட்டு பொதுமக்கள் சாலை மறியல்


வடிகால் வசதிகேட்டு பொதுமக்கள் சாலை மறியல்
x

கரூர் ஆண்டாங்கோவில் பகுதியில் வீடுகளுக்குள் மழைநீர் புகுந்ததால் வடிகால் வசதிகேட்டு பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

கரூர்

சாலை மறியல்

கரூர் ஆண்டாங்கோவில் கீழ்பாக்கம் ஊராட்சிக்குட்பட்ட சஞ்சய் நகர் பகுதியில் 100-க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. இங்கு ஏராளமான குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்நிலையில் கடந்த 2 நாட்களாக கரூர் நகரப் பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வந்ததன் காரணமாக சஞ்சய் நகர் பகுதியில் உள்ள 10 வீடுகளுக்குள் மழைநீர் புகுந்தது. இதனால் அந்த குடும்பத்தினர் கடும் சிரமத்திற்கு உள்ளாகினர்.இதையடுத்து சஞ்சய் நகர் பகுதியில் மழைக்காலங்களில் இதுபோன்ற பிரச்சினை அடிக்கடி ஏற்படுவதாகவும், ஊராட்சி நிர்வாகம் முறையான வடிகால் வசதி ஏற்படுத்தி தரவேண்டும் என தெரிவித்து சஞ்சய் நகர் பகுதியை சேர்ந்த பொதுமக்கள் நேற்று காலை கரூர்-ஈரோடு சாலையில் ஆத்தூர் அருகே உள்ள தனியார் பாலிடெக்னிக் பகுதியில் தொடர்ந்து மழை பெய்து வந்த நிலையில் குடையை பிடித்துக் கொண்டு சாலை மறியலில் ஈடுபட்டனர்.

போக்குவரத்து பாதிப்பு

இதுகுறித்து தகவல் அறிந்த கரூர் நகர போலீசார் சம்பவ இடத்திற்கு வந்தனர். பின்னர் மறியலில் ஈடுபட்ட பொதுமக்களிடம் உங்களது கோரிக்கைகள் குறித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்தனர்.இதில் உடன்பாடு ஏற்பட்டதையடுத்து மறியலில் ஈடுபட்ட அனைவரும் அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த மறியலால் கரூர்-ஈரோடு சாலையில் சுமார் அரைமணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.


Next Story