நம்பியூர் அருகே பொதுமக்கள் திடீர் சாலை மறியல்

நம்பியூர் அருகே பொதுமக்கள் திடீர் சாலை மறியல்
கடத்தூர்
நம்பியூர்-கடத்தூர் ரோட்டில் பள்ளிக்கூட பிரிவு உள்ளது. இந்தபகுதியில் சாக்கடை வசதி செய்து தரக்கோரி கடத்தூர் ஊராட்சி மன்ற அலுவலகத்துக்கு அப்பகுதியைச் சேர்ந்தவர்கள் பல முறை மனு கொடுத்து இருந்தனர். ஆனால் நடவடிக்கை எடுக்கவில்லை. இதை கண்டித்து அப்பகுதியைச் சேர்ந்த ஆண்கள், பெண்கள் சுமார் 50 பேர் நம்பியூர்-கடத்தூர் ரோட்டில் நேற்று காலை 7.15 மணி அளவில் ஒன்று திரண்டனர். பின்னர் ரோட்டில் உட்கார்ந்து மறியலில் ஈடுபட்டனர். இதுபற்றிய தகவல் கிடைத்ததும் கடத்தூர் போலீசார் மற்றும் கடத்தூர் ஊராட்சி மன்ற நிர்வாகிகள் அங்கு சென்று சாலை மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்கள்.
அப்போது ஊராட்சி மன்ற நிர்வாகிகள் கூறும்போது, 'விரைவில் சாக்கடை வசதி செய்து தர நடவடிக்கை எடுக்கப்படும்' என்றனர். அதை ஏற்றுக்கொண்ட பொதுமக்கள் சாலை மறியலை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர். இதனால் சுமார் 45 நிமிடங்கள் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.