பொதுமக்கள் திடீர் சாலை மறியல்
வந்தவாசி அருகே கோவிலை தனிநபர் சொந்தம் கொண்டாடுவதைக் கண்டித்து பொதுமக்கள் திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
வந்தவாசி
வந்தவாசி அருகே கோவிலை தனிநபர் சொந்தம் கொண்டாடுவதைக் கண்டித்து பொதுமக்கள் திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
கோவில்
வந்தவாசியை அடுத்த இளங்காடு கிராமத்தில் பெரிய ஏரி அருகே வேடபாளையத்தம்மன் கோவில் உள்ளது. கடந்த ஆண்டு கிராம மக்களின் பங்களிப்புடன் இந்த கோவில் புனரமைக்கப்பட்டு மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது.
இந்த நிலையில் கோவில் அருகே உள்ள விவசாய நிலத்தின் உரிமையாளர் ஒருவர் கோவில் தனக்குத்தான் சொந்தம் என்று உரிமை கொண்டாடி வருகிறார். மேலும் கோவிலுக்கு செல்லும் பொதுமக்களை அசிங்கமாக திட்டி வருவதாக கூறப்படுகிறது.
இதுகுறித்து வருவாய்த்துறை மற்றும் காவல்துறையினரிடம் பொதுமக்கள் புகார் தெரிவித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என தெரிகிறது.
சாலை மறியல்
இதனால் ஆத்திரமடைந்த அந்த கிராமத்தை சேர்ந்த பொதுமக்கள் வந்தவாசி- திண்டிவனம் சாலை, இளங்காடு கூட்டுச் சாலையில் இன்று திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர்.
இதுகுறித்து தகவலறிந்த வந்தவாசி தாசில்தார் முருகானந்தம், வந்தவாசி துணை சூப்பிரண்டு கார்த்திக் தலைமையிலான பொன்னூர் போலீசார் விரைந்து சென்று பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
அப்போது கோவில் பிரச்சினை குறித்து உரிய நடவடிக்கை எடுப்பதாக அவர்கள் உறுதி அளித்தனர். இதையடுத்து பொதுமக்கள் சாலை மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர்.
போக்குவரத்து பாதிப்பு
இந்த சாலை மறியல் போராட்டத்தினால் வந்தவாசி- திண்டிவனம் சாலையில் சுமார் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
இந்த சம்பவத்தால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.