பொதுமக்கள் திடீர் சாலை மறியல்


பொதுமக்கள் திடீர் சாலை மறியல்
x

கே.வி.குப்பம் அருகே முறைகேடாக சொத்து மாற்றம் செய்யப்பட்டதாகக்கூறி பொதுமக்கள் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டன. மேலும் தாலுகா அலுவலகத்தில் உள்ளிருப்பு போராட்டத்திலும் ஈடுபட்டனர்.

வேலூர்

சாலை மறியல்

கே.வி.குப்பத்தை அடுத்த சென்னங்குப்பம், பி.கே.புரம் ஊராட்சிகளை சேர்ந்த பொதுமக்கள் குடியாத்தம் - காட்பாடி தேசிய நெடுஞ்சாலையில், சென்னங்குப்பம் பகுதியில் உள்ள கிராம நிர்வாக அலுவலர் அலுவலகம் எதிரில் கொளுத்தும் வெயிலில் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதுபற்றி தகவல் அறிந்ததும் குடியாத்தம் துணை போலீஸ் சூப்பிரண்டு ராமமூர்த்தி, தாசில்தார் அ.கீதா, வருவாய் ஆய்வாளர் என்.டி.கண்ணன், போலீஸ் இன்ஸ்பெக்டர் செந்தில்குமாரி, சப்-இன்ஸ்பெக்டர்கள் சிவசந்திரன், செல்வகுமார், ஒன்றியக் குழு உறுப்பினர் சுரேஷ்குமார் உள்ளிட்டோர் சென்று பேச்சுவார்த்தை நடத்தினர்.

அப்போது சொத்து மாற்றம் செய்வதில் முறைகேடுகள் நடந்திருப்பதாகவும், அதற்கு அதிகாரி தன்னுடைய அதிகாரத்தை தவறாக பயன்படுத்தி ஒருசிலருக்கு சாதகமாக செயல்பட்டு வருகிறார் என்றும், இவருக்கு துணையாக இருந்தவர்கள் மீதும் உரிய நடவடிக்கை எடுத்து, பாதிக்கப்பட்டவர்களுக்கு நியாயம் வழங்க வேண்டும் என்று சாலை மறியலில் ஈடுபட்டவர்கள் தெரிவித்தனர்.

உள்ளிருப்பு போராட்டம்

தவறு செய்தவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதிகாரிகள் உறுதி அளித்தனர். இதனைத் தொடர்ந்து சாலை மறியல் செய்தவர்கள் கலைந்து சென்றனர். பின்னர் அவர்கள் தாலுகா அலுவலகம் சென்று தாசில்தாரை சந்திக்க முயன்றனர். அப்போது அவர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டது. அதனால், தாலுகா அலுவலகத்தில் நடைபாதையில் தரையில் அமர்ந்து உள்ளிருப்பு போராட்டம் நடத்தினர்.

உடனே அவர்களை தாசில்தார் தன்னுடைய அறைக்கு அழைத்து பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது அவர்கல் முறைகேடாக சொத்து மாற்றம் செய்த விவரங்கள் அடங்கிய பக்கங்கள், பதிவேட்டில் இருந்து கிழிக்கப்பட்டுள்ளதை சுட்டிக் காட்டி நியாயம் கேட்டனர். விசாரணை நடத்தி உரிய நியாயம் கிடைக்க ஏற்பாடு செய்வதாக தாசில்தார் உறுதியளித்தார். அதைத் தொடர்ந்து அனைவரும் கலைந்து சென்றனர்.


Next Story