பொதுமக்கள் திடீர் சாலை மறியல்
வெறையூர் அருகே சாலையின் நடுவே உள்ள சுவரை அகற்றக்கோரி பொதுமக்கள் திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
வெறையூர் அருகே சாலையின் நடுவே உள்ள சுவரை அகற்றக்கோரி பொதுமக்கள் திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
சாலையின் நடுவில் சுவர்
திருவண்ணாமலை மாவட்டம் வெறையூர் அருகே தென்மாத்தூர் கிராமம் உள்ளது. திருச்சி-திருவண்ணாமலை தேசிய நெடுஞ்சாலையில் இருக்கும் இப்பகுதியில் கடந்த சில மாதங்களாக 4 வழிச்சாலை போடப்பட்டு வருகிறது. இதன் காரணமாக சாலையின் மையப்பகுதியில் சுவர் (சென்டர் மீடியன்) அமைக்கப்பட்டு வருகிறது.
இதனால் திருவண்ணாமலை பகுதியில் இருந்து வருபவர்கள் தென் மாத்தூர் கிராமத்திற்கு செல்ல முடியவில்லை. சாலையின் நடுவில் சுவர் இருப்பதால் 2 கிலோ மீட்டர் தூரம் சுற்றி வரக்கூடிய சூழல் நிலவி வருகிறது. இதனால் அப்பகுதியில் வசிப்பவர்கள் எளிதில் பஸ்சுக்காகவோ அல்லது அவசர தேவைகளுக்கோ செல்ல முடியவில்லை.
எனவே நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகளிடம் சாலையின் நடுவில் இருக்கும் சுவரை சிறிதளவு அகற்றி வழி செய்து கொடுக்க வேண்டும் என்று அப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் பலமுறை புகார் தெரிவித்தும் அதிகாரிகள் எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது.
சாலை மறியல்
இதனால் ஆத்திரம் அடைந்த அப்பகுதியைச் சேர்ந்த 50-க்கும் மேற்பட்டவர்கள் திருவண்ணாமலை சாலையில் திடீரென மறியலில் ஈடுபட்டனர்.
இதுபற்றி தகவல் அறிந்ததும் நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் மற்றும் வெறையூர் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து சாலை மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது பொதுமக்கள், எங்களால் அத்தியாவசிய தேவைகளுக்கு எளிதில் சாலையை கடந்து இருசக்கர வாகனம் அல்லது நான்கு சக்கர வாகனத்தில் செல்ல முடியவில்லை.
மேலும் சாலையின் நடுவில் இருக்கும் சுவரால் சுமார் 2 கிலோ மீட்டர் தூரம் சுற்றி செல்லக்கூடிய சூழல் நிலவி வருகிறது. எனவே, சாலையின் நடுவில் இருக்கும் சுவரை அகற்றி வழிவகை செய்ய வேண்டும் என்று கேட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
போக்குவரத்து பாதிப்பு
இதனையடுத்து பொக்லைன் எந்திரம் வரவழைக்கப்பட்டு சாலையின் நடுவில் போடப்பட்டுள்ள சிமெண்டு சுவரை அகற்றி வழி ஏற்படுத்தி கொடுத்தனர்.
அதைத் தொடர்ந்து சாலை மறியலில் ஈடுபட்டவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த சாலை மறியலால் அந்த பகுதியில் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.