அறிவிக்கப்படாத மின்வெட்டை கண்டித்து பொதுமக்கள் திடீர் சாலைமறியல்
நெல்லை மாநகர பகுதியில் அறிவிக்கப்படாத மின்வெட்டால் பொதுமக்கள் பெரிதும் அவதி அடைந்து வருகின்றனர். தச்சநல்லூரில் பொதுமக்கள் திடீரென சாலைமறியலில் ஈடுபட்டனர்.
நெல்லை மாநகர பகுதியில் அறிவிக்கப்படாத மின்வெட்டால் பொதுமக்கள் பெரிதும் அவதி அடைந்து வருகின்றனர். தச்சநல்லூரில் பொதுமக்கள் திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர்.
அறிவிக்கப்படாத மின்வெட்டு
நெல்லை மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக அறிவிக்கப்படாத மின்வெட்டு இருந்து வருகிறது. அம்பை, சேரன்மாதேவி, நெல்லை உள்ளிட்ட பகுதிகளில் இரவில் திடீர் திடீரென மின்வெட்டு ஏற்பட்டு பொதுமக்கள் அவதிப்பட்டு வருகிறார்கள்.
இந்தநிலையில் கடந்த 3 நாட்களாக நெல்லை மாநகரப் பகுதியில் நெல்லை சந்திப்பு, கொக்கிரகுளம், தச்சநல்லூர், பாளையங்கோட்டை உள்ளிட்ட பகுதிகளில் இரவு நேரங்களிலும், பகலில் மதியம் 1 மணியில் இருந்து 2 மணி வரையும் அதிக அளவில் மின்வெட்டு உள்ளது. இதனால் மக்கள் பெரும் அவதிக்கு ஆளாகி வருகிறார்கள்.
இரவில் அடிக்கடி மின்வெட்டு ஏற்படுவதால் இன்வெர்ட்டர் இல்லாத வீடுகளில் உள்ள சிறுவர்கள், பெரியவர்கள் தூங்க முடியாமல் அவதிப்பட்டு வருகிறார்கள். இதுகுறித்து இரவில் மின்சார வாரிய அலுவலகத்திற்கு தகவல் தெரிவித்தால் அங்கே சரியான தகவல் தெரிவிப்பதில்லை.
சாலை மறியல்
தச்சநல்லூரை அருகே உள்ள மேலக்கரையில் டிரான்ஸ்பார்மர் பழுது காரணமாக மேலக்கரை மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் கடந்த ஒரு வாரமாக மின்சாரம் இல்லாமல் பொதுமக்கள் அவதிப்பட்டு வந்தனர்.
இந்தநிலையில் நேற்று முன்தினம் பராமரிப்பு காரணமாக அந்த பகுதியில் பகலில் மின்சாரம் இல்லை. மாலை 5 மணிக்கு மேல் மின்சாரம் வந்த நிலையில் இரவு நேரத்தில் திடீரென மின்தடை ஏற்பட்டது. இதனால் ஆத்திரம் அடைந்த அந்தப்பகுதி பொதுமக்கள், நள்ளிரவில் திரண்டு வந்து நெல்லை-மதுரை தேசிய நெடுஞ்சாலையில் திடீரென மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
பேச்சுவார்த்தை
தகவல் அறிந்து அங்கு வந்த போலீசார், பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி சாலையில் இருந்து அப்புறப்படுத்த முயன்றனர். அப்போது போலீசாருக்கும், பொதுமக்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.
உடனடியாக சம்பவ இடத்திற்கு மின்வாரிய உதவி பொறியாளர் சங்கரன் தலைமையிலான மின்வாரிய அதிகாரிகள், மாற்று வழியில் மின்சாரம் வழங்க நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்ததை தொடர்ந்து போராட்டம் தற்காலிகமாக கைவிடப்பட்டது.
இந்த போராட்டம் குறித்து பொதுமக்கள் கூறுகையில், "கடந்த ஒரு வாரமாக அவ்வப்போது மின்சாரம் தடைபட்டது. இந்நிலையில் இன்று இரவு (அதாவது நேற்று முன்தினம்) முழுவதும் மின்சாரம் இல்லாததால் பெரிதும் அவதிப்பட்டோம். குழந்தைகள், முதியவர்கள் வீட்டில் இருக்க முடியாத நிலை உள்ளது. தொடர்ந்து இதுபோன்ற அறிவிக்கப்படாத மின்வெட்டு இருந்தால் இதைவிட தீவிரமாக போராடுவோம்" என்றனர்.
அதிகாரிகள் விளக்கம்
இதுதொடர்பாக மின்வாரிய அதிகாரிகள் கூறுகையில், "நேற்று தச்சநல்லூர் மேலக்கரை பகுதியில் பராமரிப்பு பணி காரணமாக பகல் முழுவதும் மின்வினியோகம் இல்லை. தொடர்ந்து மாலை 5 மணி வரை மின் ஊழியர்கள் விரைவாக செயல்பட்டனர். அதன்பின்னர் மின்சாரம் வழங்கப்பட்டது. ஆனால் இரவு நேரத்தில் திடீரென டிரான்ஸ்பார்மரில் ஏற்பட்ட கோளாறு காரணமாக மின்தடை ஏற்பட்டது. எனினும் உடனடியாக அங்கு ஊழியர்கள் விரைந்து சென்று இரவு முழுவதும் போராடி மின்பழுதை சரிசெய்ய முயன்றனர். ஆனால் அது முடியாத காரணத்தினால், மாற்றுப்பாதையில் மின்சாரம் வழங்கி உள்ளோம் என்றனர்.