மாட்டிறைச்சி கடைகளை அகற்றக்கோரி பொதுமக்கள் திடீர் சாலை மறியல்


மாட்டிறைச்சி கடைகளை அகற்றக்கோரி பொதுமக்கள் திடீர் சாலை மறியல்
x

சின்னசேலம் அருகே மாட்டிறைச்சி கடைகளை அகற்றக்கோரி பொதுமக்கள் திடீரென சாலை மறியலில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது

கள்ளக்குறிச்சி

சின்னசேலம்

மாட்டிறைச்சி கடைகள்

சின்னசேலத்தில் இருந்து நைனார்பாளையம் செல்லும் சாலையில் அருந்ததி இன மக்களின் மயானத்துக்கு செல்லும் பாதையோரத்தில் பேரூராட்சியின் அனுமதியோடு சின்னசேலம் அருந்ததியர் தெருவை சேர்ந்த 7 பேர் கடந்த 5 ஆண்டுகளுக்கும் மேலாக மாட்டிறைச்சி கடைகள் நடத்தி வருகின்றனர்.

இந்த நிலையில் மாட்டிறைச்சி கடைகளை அகற்றக்கோரி அப்பகுதியில் வசிக்கும் 50-க்கும் மேற்பட்டோர் நேற்று காலை சின்னசேலம்- நைனார்பாளையம் சாலையில் திடீர் மறியலில் ஈடுபட்டனர். இதனால் அங்கு போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

பேச்சுவார்த்தை

இதுபற்றிய தகவல் அறிந்து வந்த சின்னசேலம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சந்திரசேகரன் மற்றும் போலீசார் சாலை மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது மாட்டிறைச்சி கடைகளால் துர்நாற்றம் வீசுவதாகவும், இறைச்சி கழிவுகளை தெருநாய்கள் குடியிருப்பு பகுதியில் கொண்டு போடுவதாகவும், அவைகள் சாலைகளில் கூட்டமாக நிற்பதால் அச்சம் ஏற்படுவதாகவும், விபத்துகள் நடப்பதாகவும் எனவே மாட்டிறைச்சி கடைகளை அகற்ற வேண்டும் என கோரிக்கை வைத்தனர். இது சம்பந்தமாக பேரூராட்சி நிர்வாகத்திடம் பேசி முடிவெடுப்பதாக போலீசார் கூறியதன் பேரில் அனைவரும் மறியலை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர். இதனால் சின்னசேலம்-நைனார்பாளையம் இடையே ½ மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.


Next Story