திருவண்ணாமலையில் சுட்டெரிக்கும் வெயிலால் பொதுமக்கள் அவதி


திருவண்ணாமலையில் சுட்டெரிக்கும் வெயிலால் பொதுமக்கள் அவதி
x

அக்னி நட்சத்திரம் நிறைவடைந்தும் திருவண்ணாமலையில் சுட்டெரிக்கும் வெயிலால் பொதுமக்கள் அவதிப்பட்டு வருகின்றனர்.

திருவண்ணாமலை

அக்னி நட்சத்திரம் நிறைவடைந்தும் திருவண்ணாமலையில் சுட்டெரிக்கும் வெயிலால் பொதுமக்கள் அவதிப்பட்டு வருகின்றனர்.

சுட்டெரிக்கும் வெயில்

வேலூருக்கு அடுத்தப்படியாக வெயிலுக்கு பெயர் பெற்ற ஊர்களில் திருவண்ணாமலையும் ஒன்றாகும். திருவண்ணாமலை அக்னி ஸ்தலம் என்று சொல்வதற்கு ஏற்ப இங்கு கடந்த சில நாட்களாக வெயில் வெளுத்து வாங்கி வருகின்றது.

பகல் நேரங்களில் வீட்டில் இருந்து வெளியே வரமுடியாத அளவிற்கு வெயில் சுட்டெரிக்கிறது. நேற்று 105.8 டிகிரி வெயில் பதிவாகியது. இதனால் சாலைகளில் கானல்நீர் தென்பட்டது. மேலும் அனல் காற்று வீசியதால் வாகனங்களில் சென்றவர்கள் கடும் அவதிப்பட்டனர். சுட்டெரிக்கும் வெயிலால் மக்கள் சாலையோரம் விற்கப்படும் தர்பூசணி, இளநீர் மற்றும் குளிர்பான கடைகளில் தஞ்சம் அடைகின்றனர்.

சாலையில் நடந்து சென்றவர்கள் கையில் குடையுடனும், வாகனங்களில் சென்றவர்கள் துணியால் முகத்தை மூடிய படியும் செல்கின்றனர்.

பொதுமக்கள் அச்சம்

கிராமப்புறங்களில் உள்ள சிறுவர்கள் அங்குள்ள கிணறுகளில் குளித்தும், கால்வாய்களில் ஓடும் நீரில் குளித்தும் வெயிலின் தாக்கத்தை தணித்து கொள்கின்றனர்.

அக்னி நட்சத்திரம் எனும் கத்தரி வெயில் கடந்த மாதம் 4-ந் தேதி தொடங்கி 29-ந்தேதி நிறைவடைந்தது. அக்னி நட்சத்திரம் நிறைவடைந்த பின்னராவது வெயிலின் தாக்கம் குறையும் என்று மக்கள் எதிர்பார்த்து இருந்தனர். ஆனால் அக்னி நட்சத்திரம் நிறைவடைந்தும் வெயில் கொளுத்துகிறது.

இந்த வெயில் கொடுமையால் பகல் மட்டுமின்றி, இரவிலும் பேனில் இருந்து அனல் காற்று வீசுவதால் மக்கள் மிகவும் அவதி அடைந்து வருகின்றனர். இன்னும் எத்தனை நாட்களுக்கு வெயிலின் தாக்கம் அதிகமாக காணப்படுமோ என்று பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர்.


Next Story