சி.ஐ.டி.யு. அமைப்புசாரா தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
வேலூரில் சி.ஐ.டி.யு. அமைப்புசாரா தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
வேலூர் கலெக்டர் அலுவலகம் அருகே சி.ஐ.டி.யு. அமைப்புசாரா தொழிற்சங்கங்களின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. மாவட்ட ஒருங்கிணைப்பாளர் குப்பு தலைமை தாங்கினார். சி.ஐ.டி.யு. மாவட்ட செயலாளர் பரசுராமன், மாநிலக்குழு உறுப்பினர் ராமச்சந்திரன், மாவட்ட தலைவர் முரளி மற்றும் பலர் முன்னிலை வகித்தனர்.
ஆர்ப்பாட்டத்தில் ஆட்டோ டிரைவர்கள், கட்டுமானம், சுமைப்பணி, மணல் வண்டி தொழிலாளர்களுக்கு ஓய்வூதியத்தை ரூ.3 ஆயிரமாக உயர்த்தி வழங்க வேண்டும். பெண் தொழிலாளர்களுக்கு 55 வயதில் இருந்தே ஓய்வூதியம் வழங்க வேண்டும். அமைப்புசாரா தொழிற்சங்க உறுப்பினர்களின் குழந்தைகளுக்கு 1-ம் வகுப்பு முதல் கல்வி உதவித்தொகை வழங்க வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டன.
இதில் சங்க மாவட்ட துணை செயலாளர் நாகேந்திரன், சாலை போக்குவரத்து மாவட்ட தலைவர் கேசவன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.