சி.ஐ.டி.யு. தொழிற்சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம்
காவேரிப்பாக்கத்தில் சி.ஐ.டி.யு. தொழிற்சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
காவேரிப்பாக்கம் பஸ் நிலையத்தில் நேற்று மணிப்பூர் சம்பவத்தை கண்டித்து சி.ஐ.டி.யு. விவசாயிகள் சங்கம், விவசாய தொழிலாளர்கள் சங்கங்களின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. சி.ஐ.டி.யு. தொழிற்சங்க மாவட்ட செயலாளர் தவராஜ் தலைமை தாங்கினார். மாவட்ட தலைவர் வெங்கடேசன், விவசாயிகள் சங்க மாவட்ட தலைவர் கிட்டு, விவசாய தொழிலாளர்கள் சங்க மாவட்ட தலைவர் சந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
ஆர்ப்பாட்டத்தில் பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்டவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கவேண்டும். கலவரத்தை தடுக்க தவறிய மணிப்பூர் பா.ஜ.க. அரசும், மத்திய அரசும் தார்மீக பொறுப்பேற்று ராஜினாமா செய்யவேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷமிட்டனர். விவசாய சங்க மாவட்ட செயலாளர் எல்.சி.மணி, விவசாய தொழிலாளர் சங்க மாவட்ட செயலாளர் ரகுபதி, ஆட்டோ சங்கம் கே.கே.வி.பாபு, மணி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.