சி.ஐ.டி.யு. அமைப்பினர் மனு கொடுக்கும் போராட்டம்
ஆரணியில் சி.ஐ.டி.யு. அமைப்பினர் மனு கொடுக்கும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
திருவண்ணாமலை மாவட்ட பட்டு கைத்தறி நெசவாளர் சங்கம் ஆரணி சி.ஐ.டி.யு. அமைப்பு சார்பில் அமைப்பாளர் எம்.வீரபத்திரன் தலைமையில் ஆரணி அண்ணா சிலை அருகில் இருந்து பட்டு நெசவாளர்கள் தங்களது குடும்பத்துடன் ஊர்வலமாக நகரின் முக்கிய வீதிகள் வழியாக சென்று ஆரணி வருவாய் கோட்டாட்சியர் அலுவலகம் முன்பு போராட்டம் நடத்தினர்.
பின்னர் வருவாய் கோட்டாட்சியரிடம் மனு அளித்தனர். அதில், ஆரணி பட்டு கைத்தறி நெசவாளர்கள் அனைவருக்கும் தேசிய அடையாள அட்டை வழங்க வேண்டும். பட்டு கைத்தறி நெசவாளர்களுக்கு முத்ரா திட்டத்தின் கீழ் மானிய கடன் வழங்கிட வேண்டும். கைத்தறி நெசவாளர்களுக்கு கைத்தறி உபகரணங்களை உடனே வழங்க வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி உள்ளனர்.
அப்போது சி.ஐ.டி.யு. மாவட்ட செயலாளர் பாரி, மாவட்ட தலைவர் காங்கேயன், சி.பி.எம். நிர்வாகி வே.கண்ணன் மற்றும் சி.ஐ.டி.யு. நிர்வாகிகள், பட்டு சேலை உற்பத்தியாளர்கள் பலர் உடனிருந்தனர்.