சி.ஐ.டி.யு. தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
நெல்லையில் சி.ஐ.டி.யு. தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
நெல்லை பாளையங்கோட்டை திருமால் நகரில் உள்ள தொழிலாளர் அலுவலகம் முன்பு சி.ஐ.டி.யு. தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். கட்டுமானம், ஆட்டோ, சுமைப்பணி, பீடி தொழிலாளர்கள் உள்ளிட்ட முறைசாரா தொழிலாளர்களுக்கு குறைந்தபட்சம் ரூ.3 ஆயிரம் ஓய்வூதியம் வழங்க வேண்டும். அனைத்து நல வாரிய செயல்பாட்டுக்கும் அரசு நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும். தொழிலாளர் துறையில் உள்ள காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும். ஆன்லைன் மூலம் அபராதம் விதிக்கும் நடைமுறையை கைவிட வேண்டும். பெண்களுக்கு 55 வயதில் ஓய்வூதியம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆர்ப்பாட்டத்துக்கு கட்டுமான தொழிலாளர் சங்க பொதுச்செயலாளர் சுரேஷ் தலைமை தாங்கினார். சி.ஐ.டி.யு. மாவட்ட செயலாளர் முருகன் ஆர்ப்பாட்டத்தை தொடங்கி வைத்தார். சி.ஐ.டி.யு. மாநிலக்குழு உறுப்பினர் மோகன், தையல் சங்க பொதுச் செயலாளர் சீதா, ஆட்டோ சங்க தலைவர் நடராஜன், பீடித்தொழிலாளர் நலச்சங்க பொதுச்செயலாளர் மாரிச்செல்வம் உள்ளிட்டோர் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினார்கள்.