சி.ஐ.டி.யு. தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்


சி.ஐ.டி.யு. தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
x

சேலத்தில் சி.ஐ.டி.யு. தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

சேலம்

சேலம் மாவட்ட சி.ஐ.டி.யு. தொழிற்சங்கம் சார்பில், தொழிலாளர் நல அலுவலர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதற்கு தொழிற்சங்க மாவட்ட தலைவர் பன்னீர்செல்வம் தலைமை தாங்கினார். மாநில துணைத்தலைவர் தியாகராஜன், மாவட்ட செயலாளர் உதயகுமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் ஆன் லைன் மூலம் உறுப்பினர் பதிவு செய்வதில் உள்ள குறைபாடுகளை சரி செய்திட வேண்டும். நிலுவையில் உள்ள மனுக்கள் மீது நடவடிக்கை எடுத்து காலதாமதம் இன்றி நலத்திட்ட உதவிகள் வழங்க வேண்டும். நல வாரிய உறுப்பினர்களுக்கு மாத ஓய்வூதியம் ரூ.3 ஆயிரம், விபத்து நிவாரணம் ரு.5 லட்சம் வழங்க வேண்டும். கட்டுமானம் மற்றும் ஓட்டுனர் நல வாரியங்களில் உள்ள நிதியை, வாரியம் சம்பந்தப்பட்ட தொழிலாளர்களின் நலனுக்கு மட்டும் செலவிட வேண்டும். முறை சாரா தொழிலாளர் கண்காணிப்பு குழுக்களை மாதந்தோறும் நடத்துவதை உறுதிப்படுத்த வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டன.

சிறு, குறு நடுத்தர தொழில்களுக்கு தேவையான மூலப்பொருட்களின் விலை, பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களின் விலையை கட்டுப்படுத்த வேண்டும். அனைத்து தொழிலாளர்களுக்கும் சமூக பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டும். நல வாரிய அலுவலகங்களில் உள்ள காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும். மழைக்கால நிவாரணம் வழங்க வேண்டும். சுமை தூக்கும் தொழிலாளர்களுக்கு தனி நல வாரியம் அமைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.


Next Story