காலிக்குடங்களுடன் பொதுமக்கள் மறியல்
காலிக்குடங்களுடன் பொதுமக்கள் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
உசிலம்பட்டி,
மதுரை மாவட்டம் சேடபட்டி அடுத்த தாடையம்பட்டி ஊராட்சிக்கு உட்பட்டது மானிப மேட்டுப்பட்டி கிராமம். இங்கு 100-க்கும் மேற்பட்ட கிராம மக்கள் வசித்து வருகின்றனர். இந்த கிராம மக்களுக்கு கடந்த சில மாதங்களாக முறையான குடிநீர் வழங்கப்படவில்லை எனவும், கடந்த 10 நாட்களாக முற்றிலுமாக குடிநீர் வழங்கப்படவில்லை எனவும் கூறப்படுகிறது. இது குறித்து ஊராட்சி நிர்வாகத்திடம் பலமுறை தெரிவித்தும் எந்த நடவடிக்கைகளும் எடுக்கப்படவில்லையாம்.
இதனால் ஆத்திரமடைந்த அப்பகுதி மக்கள் நேற்று உசிலம்பட்டி-ஏழுமலை சாலையில் உள்ள கோடாங்கிநாயக்கன்பட்டியில் காலிக்குடங்களுடன் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவலறிந்து வந்த எழுமலை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மணிமொழி தலைமையான போலீசார் மற்றும் சேடபட்டி ஊராட்சி ஒன்றிய அலுவலர்கள் சாலை மறியலில் ஈடுபட்ட கிராம மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது விரைவில் முறையான குடிநீர் வழங்க நடவடிக்கைகள் எடுப்பதாக உறுதியளித்தனர்.
இதையடுத்து பொதுமக்கள் சாலை மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர். இந்த சாலை மறியல் போராட்டத்தால் அப்பகுதியில் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.