குடிமை பணிகள் குரூப்-2 எழுத்து தேர்வு
நெல்லை மாவட்டத்தில் குடிமை பணிகள் குரூப்-2 எழுத்து தேர்வு நடைபெற உள்ளது.
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தால் நெல்லை மாவட்டத்தில் ஒருங்கிணைந்த குடிமைப்பணிகள் தேர்வு குரூப்-2, 2ஏ பதவிக்கான முதன்மை எழுத்து தேர்வு நாளை மறுநாள் (சனிக்கிழமை) காலையில் நடக்கிறது. இந்த தேர்வை 5ஆயிரத்து 70 பேர் எழுதுகிறார்கள். நெல்லை ஐன்ஸ்டீன் பொறியியல் கல்லூரி, கலை அறிவியல் கல்லூரி, ஜான்ஸ் மேல்நிலைப்பள்ளி, ஜோஸ் மெட்ரிகுலேஷன் மேல்நிலைப்பள்ளி, அரசு பொறியியல் கல்லூரி, ரோஸ்மேரி மேல்நிலைப்பள்ளி, சாராள் தக்கர் மேல்நிலைப்பள்ளி, சாராள் தக்கர் கல்லூரி, ம.தி.தா. இந்து கல்லூரி, சாப்டர் மேல்நிலைப்பள்ளி உள்பட 30 தேர்வு மையங்களில் இந்த தேர்வு நடக்கிறது.
தேர்வுப் பணிகளை மேற்கொள்ள துணை தாசில்தார் நிலையில் 10 சுற்று நிலைக்குழு அலுவலர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். 31 வீடியோகிராபர்கள் வீடியோ எடுக்கவும், தேர்வை கண்காணிக்க 30 ஆய்வு அலுவலர்களும் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். தேர்வறைக்கு செல்போன் எடுத்துச்செல்லக்கூடாது. தேர்வு எழுதுவது தவிர மற்ற நபர்கள் தேர்வு மைய வளாகத்திற்கு செல்ல அனுமதி வழங்கப்படமாட்டாது. இந்த தகவலை கலெக்டர் கார்த்திகேயன் தெரிவித்துள்ளார்.