அரசு பள்ளி கட்டிடத்தை ஆய்வு செய்த அதிகாரிகளுடன், பொதுமக்கள் வாக்குவாதம்


அரசு பள்ளி கட்டிடத்தை ஆய்வு செய்த அதிகாரிகளுடன், பொதுமக்கள் வாக்குவாதம்
x

வகுப்பறை மேற்கூரையின் சிமெண்டு பூச்சு பெயர்ந்து விழுந்த சம்பவம் தொடர்பாக அரசு பள்ளியை ஆய்வு செய்த அதிகாரிகளுடன், பொதுமக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

தேனி

உயிர் தப்பிய மாணவர்கள்

கடமலைக்குண்டு அருகே மந்திச்சுனை கிராமத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் 70-க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் படித்து வருகின்றனர். ஒரு தலைமை ஆசிரியை உள்பட 3 ஆசிரியர்கள் பணிபுரிகின்றனர்.

25 ஆண்டுகளுக்கு முன்னர் கட்டப்பட்ட பள்ளி கட்டிடத்துக்கு வர்ணம் பூசும் பணி, கடந்த சில வாரங்களுக்கு முன்பு முடிவடைந்தது. இந்தநிலையில் நேற்று முன்தினம் வழக்கம் போல தலைைம ஆசிரியை மரகதம், ஒரு வகுப்பறையில் பாடம் நடத்தி கொண்டிருந்தார்.

அப்போது திடீரென பள்ளியின் மேற்கூரை சிமெண்டு பூச்சு பெயர்ந்து விழுந்தது. இதில் தலைமை ஆசிரியை, மாணவ-மாணவிகள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். இந்தநிலையில் கோவில் வளாகத்தில் அமர வைக்கப்பட்டு மாணவ-மாணவிகளுக்கு பாடம் கற்பிக்கப்பட்டு வருகிறது.

அதிகாரிகளுடன் வாக்குவாதம்

இந்தநிலையில் அந்த பள்ளியை, கடமலை-மயிலை ஊராட்சி ஒன்றிய ஆணையர்கள் திருப்பதி முத்து, அய்யப்பன் மற்றும் மந்திச்சுனை ஊராட்சி மன்ற தலைவர் சுப்பிரமணி ஆகியோர் நேற்று ஆய்வு செய்தனர்.

அப்போது கட்டிடத்தை முறையாக சீரமைக்காமல், வர்ணம் பூசும் பணி மட்டும் நடைபெற்று முடிந்தது குறித்து அதிகாரிகளிடம் பொதுமக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். மேலும் பள்ளி கட்டிடத்தை இடித்து விட்டு புதிய கட்டிடம் கட்ட வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.

கலெக்டரிடம் அறிக்கை

இதைத்தொடர்ந்து மாவட்ட திட்ட இயக்குனர் தண்டபாணி, மாவட்ட செயற்பொறியாளர் முருகன், மாவட்ட கல்வி அதிகாரிகள் பள்ளியில் ஆய்வு மேற்கொண்டனர்.

அப்போது, பள்ளி கட்டிடத்தின் மேற்கூரையில் ஏறிச்சென்று அதன் உறுதித்தன்மை ஆய்வு செய்யப்பட்டது. ஆய்வு முடிவு குறித்து மாவட்ட கலெக்டருக்கு அறிக்கை சமர்ப்பிக்கப்படும். அதன்பிறகு புதிய பள்ளி கட்டிடம் கட்டுவது குறித்து முடிவு எடுக்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

பள்ளி கட்டிடம் சீரமைக்கப்படும் வரை அருகே உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியின் வகுப்பறை கட்டிடத்தில் மாணவர்களுக்கு பாடம் கற்பிக்க அதிகாரிகள் உத்தரவிட்டனர்.


Next Story