அரசு ஆஸ்பத்திரியில் குழந்தைகளை கடத்தியதாக பெண்ணை தாக்கிய பொதுமக்கள்


அரசு ஆஸ்பத்திரியில் குழந்தைகளை கடத்தியதாக பெண்ணை தாக்கிய பொதுமக்கள்
x
தினத்தந்தி 22 July 2023 12:15 AM IST (Updated: 22 July 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

கடலூர் அரசு ஆஸ்பத்திரியில் குழந்தைகளை கடத்தியதாக நினைத்து பெண்ணை, பொதுமக்கள் தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கடலூர்

குழந்தைகளை தேடிய பொதுமக்கள்

பண்ருட்டி அருகே உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்தவர் 22 வயதுடைய இளம்பெண். இவருக்கு திருமணமாகி 2 வயதில் ஒரு மகள் உள்ளான். இந்த நிலையில் நிறைமாத கர்ப்பிணியாக இருந்த அந்த பெண்ணை, பிரசவத்திற்காக அவரது உறவினர்கள் கடந்த சில நாட்களுக்கு முன்பு கடலூர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு கடந்த 5 நாட்களுக்கு முன்பு குழந்தை பிறந்தது. அந்த பெண்ணுடன், அவரது தாயும் தங்கியிருந்தார்.

இந்த நிலையில் நேற்று முன்தினம் நள்ளிரவு அரசு ஆஸ்பத்திரிக்கு வந்திருந்த 45 வயது மதிக்கத்தக்க ஒரு பெண், அங்கிருந்த குழந்தைகளை கொஞ்சிக் கொண்டிருந்ததாக கூறப்படுகிறது. அப்போது குழந்தை பெற்ற பெண், தனது அருகில் இருந்த தன்னுடைய 2 வயது மகளையும், பிறந்த குழந்தையையும் காணவில்லை என கதறி கூச்சலிட்டார். பின்னர் அவர், அங்கிருந்த பொதுமக்களுடன் குழந்தைகளை தேடி அலைந்தார்.

பெண் மீது தாக்குதல்

அப்போது சந்தேகத்திற்கிடமான வகையில் குழந்தைகளை கொஞ்சிக் கொண்டிருந்த பெண் தான், 2 குழந்தைகளையும் கடத்தியிருக்கலாம் என நினைத்த மருத்துவமனைக்கு வந்திருந்த பொதுமக்கள், அவரை சூழ்ந்து கொண்டு விசாரித்தனர். மேலும் சிலர் அந்த பெண்ணை தாக்கியதாக தெரிகிறது. பின்னர் இதுகுறித்து போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன் பேரில் அங்கு வந்த போலீசார், பொதுமக்கள் பிடித்து வைத்திருந்த பெண்ணிடம் விசாரணை நடத்தினர்.

இதற்கிடையே கடத்தப்பட்டதாக கூறப்பட்ட 2 குழந்தைகளையும், அவரது பாட்டி தூக்கிக்கொண்டு வந்தார். அப்போது தான் குழந்தைகள் கடத்தப்படவில்லை என்றும், குழந்தைகளின் பாட்டி தான் அவர்களை தூக்கிச்சென்றதும் தெரியவந்தது. இதையடுத்து பொதுமக்கள் பிடித்து வைத்திருந்த பெண்ணை, போலீசார் அங்கிருந்து அனுப்பி வைத்தனர். இந்த சம்பவத்தால் கடலூர் அரசு மருத்துவமனையில் பரபரப்பு ஏற்பட்டது.


Next Story