பூலாம்பாடி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தை முற்றுகையிட்ட பொதுமக்கள்
மாலை, இரவு நேர பணியில் டாக்டர்களை நியமிக்கக்கோரி பூலாம்பாடி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தை பொதுமக்கள் முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
ஆரம்ப சுகாதார நிலையம்
பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை தாலுகா, பூலாம்பாடியில் 30 படுக்கை வசதிகளுடன் கூடிய மேம்படுத்தப்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையம் உள்ளது. இந்த சுகாதார நிலையத்தில் பூலாம்பாடி மற்றும் அதனை சுற்றியுள்ள பொதுமக்கள் வந்து சிகிச்சை பெற்று செல்கின்றனர்.
குறிப்பாக இந்த சுகாதார நிலையம் பூலாம்பாடியை சுற்றியுள்ள மலையடிவாரத்தில் வசிக்கும் மலைவாழ் மக்களுக்கு பெரிதும் பயனாக இருந்து வருகிறது. மேலும் இந்த சுகாதார நிலையத்தில் பிரசவமும் பார்க்கப்படுகிறது. கர்ப்பிணிகள் பிரசவத்துக்காக வருகின்றனர்.
முற்றுகை
இந்த நிலையில் சுகாதார நிலையத்தில் பொது பிரிவில் 2 டாக்டர்கள் தான் பணிபுரிந்து வருவதாகவும், பல் மருத்துவ பிரிவிற்கும், சித்தா பிரிவிற்கும் டாக்டர்கள் நியமிக்கப்படவில்லை என்றும் கூறப்படுகிறது. பணிபுரிகின்ற டாக்டர்களும் பகல் நேரத்தில் தான் வந்து செல்கின்றனர். ஆனால் மாலை நேரத்திலும், இரவு நேரத்திலும் சுகாதார நிலையத்தில் பணியில் டாக்டர்கள் யாரும் இல்லை.
இதனால் மாலை, இரவு நேரத்தில் வரும் நோயாளிகள் தகுந்த சிகிச்சை பெற முடியாமல் திரும்பி சென்று விடுகின்றனர். எனவே மாலை, இரவு நேரத்திலும் சுகாதார நிலையத்தில் போதிய அளவு டாக்டர்களை நியமிக்கக்கோரி பூலாம்பாடியை சேர்ந்த பொதுமக்கள் நேற்று சுகாதார நிலையத்தை முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. மேலும் அவர்கள் இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்து கலைந்து சென்றனர்.