கடலூர் அருகே கோவிலில் திருட முயன்ற 4 பேரை மடக்கி பிடித்த பொதுமக்கள் வேளாங்கண்ணிக்கு பாதயாத்திரையாக சென்றபோது கைவரிசை
கடலூர் அருகே கோவிலில் திருட முயன்ற 4 பேரை பொதுமக்கள் மடக்கி பிடித்தனர். வேளாங்கண்ணிக்கு பாதயாத்திரையாக சென்றபோது அவர்கள் கைவரிசை காட்டியது போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.
நெல்லிக்குப்பம்,
கடலூர் அடுத்த ரெட்டிச்சாவடி பெரியகாட்டுப்பாளையம் சாலை ஓரத்தில் திருக்காட்டீஸ்வரர் கோவில் உள்ளது. அதிகாலையில் இந்த கோவிலில் ஏதோ உடைக்கும் சத்தம் கேட்டது. இந்த சத்தம் கேட்ட அக்கம்பக்கத்தினர் சந்தேகம் அடைந்து கோவிலுக்கு வந்து பார்த்தனர்.
அப்போது கோவிலில் இருந்த உண்டியலின் பூட்டை 4 பேர் உடைத்துக் கொண்டிருந்தனர். இதைபார்த்து அதிர்ச்சி அடைந்த பொதுமக்கள் அவர்கள் 4 பேரையும் விரைந்து சென்று பிடிக்க முயன்றனர். பொதுமக்கள் வருவதை பார்த்ததும் அந்த 4 பேரும் அங்கிருந்து தப்பி ஓட முயன்றனர்.
பாதயாத்திரையாக சென்றபோது...
உடனே பொதுமக்கள் விரட்டிச்சென்று, அந்த 4 பேரையும் மடக்கிப்பிடித்தனர். பின்னர் இதுபற்றி போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். அதன்பேரில் ரெட்டிச்சாவடி போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து 4 பேரையும் பிடித்து விசாரித்தனர்.
விசாரணையில் அவர்கள் சென்னை கோட்டூர்புரத்தை சேர்ந்த கரண் (வயது 18), செல்வம்(24), சூரிய பிரகாஷ் (18) மற்றும் 17 வயது சிறுவன் என்பது தெரியவந்தது. மேலும் இவர்கள் சென்னையில் இருந்து வேளாங்கண்ணிக்கு பாதயாத்திரையாக வந்தபோது, பொதுமக்கள் நடமாட்டம் இல்லாததால் கோவிலில் இருந்த உண்டியலை உடைத்து திருட முயன்றது போலீசாரின் விசாரணையில் தெரியவந்துள்ளது.
கைது
இதையடுத்து சிறுவன் உள்பட 4 பேரையும் போலீசார் கைது செய்தனர். மேலும் அவர்களிடமிருந்த செல்போன்கள், அரிவாள் உள்ளிட்ட பொருட்களும் பறிமுதல் செய்யப்பட்டது. தொடர்ந்து இவா்கள் வேறு ஏதேனும் திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டுள்ளார்களா? என்றும் விசாரணை நடத்தி வருகின்றனர்.
அதிகாலையில் கோவில் உண்டியலை உடைத்து திருட முயன்ற சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.