லாரிகளை சிறைபிடித்த பொதுமக்கள்


லாரிகளை சிறைபிடித்த பொதுமக்கள்
x
தினத்தந்தி 24 Jun 2023 3:30 AM IST (Updated: 24 Jun 2023 3:30 AM IST)
t-max-icont-min-icon

பந்தலூர் அருகே குப்பை கொட்ட எதிர்ப்பு தெரிவித்து, லாரிகளை பொதுமக்கள் சிறைபிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

நீலகிரி

பந்தலூர்

பந்தலூர் அருகே குப்பை கொட்ட எதிர்ப்பு தெரிவித்து, லாரிகளை பொதுமக்கள் சிறைபிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

குப்பை கிடங்கு

பந்தலூர் அருகே சேரங்கோடு ஊராட்சிக்கு உட்பட்ட சேரம்பாடி, எருமாடு, கையுன்னி, அய்யன்கொல்லி, கொளப்பள்ளி உள்ளிட்ட பகுதிகளில் சேகரமாகும் குப்பைகள் அகற்றப்பட்டு லாரி மூலம் எருமாடு அருகே இன்கோ நகரில் உள்ள குப்பை கிடங்கில் கொட்டப்பட்டு வருகிறது. அங்கு ஊராட்சி சார்பில், மக்கும், மக்காத குப்பை என தரம் பிரித்து எடுக்கும் பணி நடைபெற்று வந்தது. அங்கு குடியிருப்பு அருகே உள்ளதால், துர்நாற்றம் வீசியது. மேலும் நோய் பரவும் அபாயம் உள்ளது.

இதனால் அங்கு குப்பை கொட்ட பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் புஞ்சகொல்லி குழிவயல் பகுதியில் வருவாய்த்துறை இடத்தை தேர்வு செய்ய கூடலூர் ஆர்.டி.ஓ. முகமது குதரத்துல்லா உத்தரவிட்டார். அதன்படி பந்தலூர் தாசில்தார் நடேசன் தலைமையில் வருவாய்த்துறையினர் இடத்தை தேர்வு, அங்கு குப்பைகளை கொட்ட அனுமதித்தனர். இந்தநிலையில் அந்த பகுதியில் குப்பைகள் கொட்டப்பட்டு வந்தது.

லாரிகள் சிறைபிடிப்பு

இதையடுத்து அப்பகுதி மக்களும் கொசுத்தொல்லை அதிகரித்து, நோய் பரவும் அபாயம் உள்ளதாக கூறி அங்கு குப்பை கொட்ட பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும் இதுதொடர்பாக வருவாய்த்துறையினருக்கு மனு கொடுத்தனர். அதன் மீது நடவடிக்கை எடுக்கவில்லை என கூறப்படுகிறது. இந்தநிலையில் நேற்று சேரங்கோடு ஊராட்சியில் இருந்து குப்பைகளை ஏற்றி கொண்டு லாரிகள் புஞ்சகொல்லி பகுதிக்கு வந்தது. இதை அறிந்த அந்த பகுதி மக்கள் லாரிகளை சிறைபிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தகவல் அறிந்த சேரம்பாடி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சிக்கந்தர், அய்யன்கொல்லி கிராம நிர்வாக அலுவலர் அசோக்குமார், சேரங்கோடு ஊராட்சி துணைத்தலைவர் சந்திரபோஸ் ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் நேற்று மட்டும் குப்பை கொட்டி கொள்ளலாம். இன்று (சனிக்கிழமை) சேரங்கோடு ஊராட்சி அலுவலகத்தில் தாசில்தார் நடேசன் தலைமையில் பேச்சுவார்த்தை நடத்தி தீர்மானிக்கப்படும் என உறுதியளிக்கப்பட்டது. இதன் பின்னர் பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.


Next Story