கிளாம்பாக்கம் பஸ் நிலையம் ஜூன் மாதம் திறப்பு -சட்டசபையில் அறிவிப்பு
கிளாம்பாக்கம் பஸ்நிலையம் ஜூன் மாதம் திறக்கப்படும் என்றும், சென்னையில் பஸ், மின்சார ரெயில், மெட்ரோ ரெயிலில் பயணம் செய்ய ஒழுங்கிணைந்த டிக்கெட்டுக்கு ஏற்பாடு நடைபெற்று வருவதாகவும் சட்ட சபையில் அறிவிக்கப்பட்டது.
சென்னை,
தமிழ்நாடு சட்டசபையில் வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சி துறை மீதான மானிய கோரிக்கை விவாதம் நேற்று நடைபெற்றது.
இதில் இந்த துறையின் அமைச்சர் சு.முத்துச்சாமி பல்வேறு புதிய அறிவிப்புகளை வெளியிட்டார்.
ஒரே டிக்கெட்
அதில் அவர், சென்னை பெருநகர பகுதியில் இயங்கும் மாநகர பஸ்கள், மெட்ரோ ரெயில் மற்றும் புறநகர் மின்சார ரெயில் போன்ற பொது போக்குவரத்து சேவைகளில் இடையூறு இல்லாத பயணத்தை உறுதி செய்யும் வகையில் சம்பந்தப்பட்ட துறைகளுடன் கலந்து ஆலோசித்து, ஒரே டிக்கெட்டில் பயணம் செய்யும் ஒருங்கிணைந்த கியூஆர் பயணச்சீட்டு முறை மற்றும் பயண திட்டமிடலுக்கான செயலி ரூ.15 கோடி மதிப்பீட்டில் உருவாக்கப்பட்டு அறிவிக்கப்படும்' என்ற சிறப்பு அறிவிப்பையும் வெளியிட்டார்.
அமலாக்கப்பிரிவு
மேலும் அவர் வெளியிட்ட அறிவிப்புகள் வருமாறு:-
* அங்கீகாரமற்ற கட்டுமானங்கள் மற்றும் விதிமீறல் கட்டிடங்கள் பெருகுவதை தடுக்கவும், ஒழுங்குபடுத்தவும் நகர் ஊரமைப்பு இயக்ககத்தின் தலைமை அலுவலகத்தில் அதற்கென்று தனி அமலாக்கப்பிரிவு ஒதுக்கப்படும்.
தகவல் தொழில்நுட்ப (செயற்கை கோள் மற்றும் புவியியல் தகவல் தொகுப்பு) வசதிகளை பயன்படுத்தி பிரத்யேக மென்பொருள் தயாரித்து அதன்மூலம் அங்கீகாரமற்ற மற்றும் விதிமீறல் கட்டிடங்களை கண்டறிந்து நடவடிக்கை எடுக்கப்படும். முதற்கட்டமாக கோவை மாவட்டத்தில் சோதனை அடிப்படையில் இந்த திட்டம் செயல்படுத்தப்படும்.
* மாநிலத்தின் திட்டப்பகுதி தற்போதுள்ள 7 சதவீத நிலப்பரப்பில் இருந்து 22 சதவீதமாக அதிகரிக்க 135 இடங்களில் மொத்தம் 23 ஆயிரத்து 129 சதுர கிலோ மீட்டர் நிலப்பரப்பு முழுமை திட்டத்தின் கீழ் கொண்டுவரப்பட்டு முழுமை திட்டங்கள் புதுநகர் வளர்ச்சி திட்டங்கள் தயாரிக்கப்படுகிறது. புராதன கட்டிடங்கள் அமைந்த இடங்கள் மற்றும் பழங்கால கட்டிடங்கள் அமைந்த பகுதிகளை கண்டறிந்து அவற்றை தொடர் கட்டிடம் பகுதிகளாக முழுமை திட்டத்தில் சேர்க்கப்படும்.
* மலையிடப்பகுதிகளில் வளர்ச்சியை ஒழுங்குபடுத்துவதற்கு தற்போது பயன்பாட்டில் உள்ள பல்வேறு விதிகளை மறு ஆய்வு செய்து மலைப்பகுதிகளுக்கென ஒருங்கிணைந்த விதிகள் உருவாக்கப்படும்.
* கட்டிட முடிவு சான்று விரைந்து வழங்கவும், பிணைய தொகையை முடிவு சான்று வழங்கும் போதே திருப்பி கொடுக்கவும் நடவடிக்கை எடுக்கப்படும்.
மேற்கண்ட அறிவிப்புகள் உள்பட பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டார்.
கிளாம்பாக்கம் பஸ் நிலையம்
சென்னை பெருநகர வளர்ச்சி குழுமம் தொடர்பான மானிய கோரிக்கை மீதான விவாதத்தில் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு 50 புதிய அறிவிப்புகளை வெளியிட்டார். அதில், கோயம்பேடு பஸ் நிலையத்தில் நிலவும் போக்குவரத்து நெரிசலை சீரமைக்கும் பொருட்டு கிளாம்பாக்கத்தில் 88.52 ஏக்கரில் ரூ.393.74 கோடி மதிப்பீட்டில் நவீன தொழில்நுட்ப வசதிகளுடன் அமைக்கப்பட்டு வரும் புதிய பஸ் நிலையம் வருகிற ஜூன் மாதத்தில் 'கலைஞர் நூற்றாண்டு பஸ் முனையம்' என்ற பெயரில் மக்கள் பயன்பாட்டுக்காக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினால் திறந்து வைக்கப்பட உள்ளது.' என்று அறிவித்தார்.
மேலும் இந்த பஸ் நிலையத்தில் இருந்து ஊரப்பாக்கம் ஏரி வரை ரூ.17 கோடி மதிப்பீட்டில் புதிய மழைநீர் வடிகால் அமைக்கப்படும். கிளாம்பாக்கம் பஸ் நிலையத்தில் 6 ஏக்கரில் ரூ.8 கோடி மதிப்பீட்டில் சென்னை பெருநகர வளர்ச்சி குழுமத்தால் பூங்கா அமைக்கப்படும்.
இந்த பஸ் நிலையத்தை ஒட்டியுள்ள அயனஞ்சேரி- மீனாட்சிபுரம் சாலை ரூ.7.5 கோடி மதிப்பீட்டில் மேம்படுத்தப்படும் என்றும் அறிவித்தார்.
மாநகராட்சிக்கு ரூ.30.30 கோடி நிதி
தொடர்ந்து அமைச்சர் பி.கே.சேகர்பாபு வெளியிட்ட அறிவிப்புகள் வருமாறு:-
* தற்போது கட்டப்பட்டு வரும் குத்தம்பாக்கம் புதிய பஸ் நிலையம் சர்வதேச தரத்துக்கு ரூ.60 கோடி மதிப்பீட்டில் விரிவாக்கம் செய்யப்படும்.
* திருவொற்றியூரில் ரூ.30 கோடி மதிப்பீட்டில் வடசென்னை மக்களுக்கு பயன்படும் வகையில் சுமார் 5 கி.மீ. நீளமுள்ள கடற்கரை மேம்படுத்தப்படும்.
* சாத்தாங்காடு இரும்பு மற்றும் எக்கு அங்காடி வளாகம் ரூ.33.35 கோடி மதிப்பீட்டில் நவீனமயமாக்கப்படும்.
* சென்னை பெருநகர வளர்ச்சி குழுமம் மாதவரம் சரக்குந்து முனையத்தில் உள்கட்டமைப்பை மேம்படுத்த ரூ.30.30 கோடி நிதியை பெருநகர சென்னை மாநகராட்சிக்கு வழங்கும்.
இணைய வழியில் திட்ட அனுமதி
* சென்னை வெளிவட்ட சாலையை ஒட்டி வரதராஜபுரத்தில் ஒப்பந்த பஸ்கள் நிறுத்துமிடம் ரூ.29 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்படும்.
* கிழக்கு கடற்கரையில் நீலாங்கரை முதல் அக்கரை வரை முதற்கட்டமாக சுமார் 5 கி.மீ. நீளத்துக்கு மிதிவண்டிப்பாதை (சைக்கிள்) மற்றும் நடைப்பாதை ரூ.20 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்படும்.
* சென்னை வில்லிவாக்கம், இரட்டை ஏரி, பாடி மற்றும் வடபழனி ஆகிய 4 மேம்பாலங்களுக்கு கீழ் உள்ள இடங்கள் ரூ.6 கோடி மதிப்பீட்டில் அழகுப்படுத்தப்படும்.
* சிறுசேரியில் அமைந்துள்ள 50 ஏக்கர் வன நிலத்தில் ரூ.5 கோடி மதிப்பீட்டில் நகர்ப்புற வளம் ஏற்படுத்தப்படும்.
* சென்னை வெளிவட்ட சாலையில் 4 உடற்பயிற்சி பூங்காக்கள் ரூ.4 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்பட்டு பராமரிக்கப்படும்.
* சென்னை பெருநகர பகுதியில் மனைப்பிரிவுகளுக்கான திட்ட அனுமதி இணைய வழியாக வழங்கப்படும்.
* சென்னை பெருநகர பகுதியில் உள்ள பாரம்பரிய கட்டிடங்களை பாதுகாப்பதற்காக மாற்றத்தக்க வளர்ச்சி உரிமை சான்றிதழ் வழங்கப்படும்.
மேற்கண்டவாறு அறிவிப்புகளை அமைச்சர் பி.கே.சேகர்பாபு அறிவித்தார்.