போரூரில் நாம் தமிழர்-ஆதித்தமிழர் கட்சியினர் இடையே மோதல் - கல், கட்டையால் தாக்கிக் கொண்டதால் பரபரப்பு


போரூரில் நாம் தமிழர்-ஆதித்தமிழர் கட்சியினர் இடையே மோதல் - கல், கட்டையால் தாக்கிக் கொண்டதால் பரபரப்பு
x

சென்னை போரூரில் நாம் தமிழர் கட்சி மற்றும் ஆதித்தமிழர் கட்சியினர் இடையே மோதல் ஏற்பட்டது. இருதரப்பினரும் கல் மற்றும் கட்டையால் சரமாரியாக தாக்கிக்கொண்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

சென்னை

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் பிரசாரத்தின்போது அருந்ததியர்கள் குறித்து அவதூறாக பேசியதாக கூறப்படுகிறது. இதனை கண்டித்து சென்னை போரூரில் உள்ள நாம் தமிழர் கட்சி அலுவலகத்தை ஆதித்தமிழர் கட்சியின் சார்பில் முற்றுகையிட்டு போராட்டம் நடத்த போவதாக அறிவிக்கப்பட்டு இருந்தது. இதனால் நாம் தமிழர் கட்சி அலுவலகம் முன்பு போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.


நேற்று காலை ஆதித்தமிழர் கட்சியின் சார்பில் ஜக்கையன் தலைமையில் 50-க்கும் மேற்பட்ட ஆதித்தமிழர் கட்சியை சேர்ந்த நிர்வாகிகள் கைகளில் கட்சி கொடிகளை ஏந்தியடி ஆற்காடு சாலையில் கோஷங்கள் எழுப்பியவாறு ஊர்வலமாக வந்தனர். அவர்களை ஆற்காடு சாலையில் போரூர் போலீசார் தடுத்து நிறுத்தினார்கள்.


ஆனால் போலீசாரின் தடுப்பையும் மீறி 10-க்கும் மேற்பட்ட ஆதித்தமிழர் கட்சி நிர்வாகிகள், நாம் தமிழர் கட்சி அலுவலகத்தை முற்றுகையிட சென்றனர். அப்போது கட்சி அலுவலகத்தில் நாம் தமிழர் கட்சி நிர்வாகிகள் ஆலோசனைக்கூட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.


ஆதித்தமிழர் கட்சி நிர்வாகிகள் அங்கு பாதுகாப்புக்கு நின்றிருந்த போலீசாரையும் மீறி நாம் தமிழர் கட்சி அலுவலகம் மீது கற்கள், பாட்டில்களை வீசினார்கள். இதில் அலுவலகத்தின் முகப்பு கண்ணாடி உடைந்தது.


இதனால் அலுவலகத்தில் ஆலோசனை கூட்டத்தில் ஈடுபட்டு இருந்த நாம் தமிழர் கட்சி நிர்வாகிகள், வெளியே வந்தனர். அப்போது அவர்கள் மீதும் கற்கள் பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து இரு தரப்புக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு பயங்கர மோதலாக மாறியது. இரு தரப்பினரும் மாறி, மாறி கல்வீசி தாக்கி கொண்டனர்.


குறைந்த அளவிலேயே போலீசார் இருந்ததால் இரு தரப்பினரையும் அவர்களால் சமாதானம் செய்ய முடியவில்லை. இதனால் போலீசார் கண் முன்னேயே இரு தரப்பினரும் மோதலில் ஈடுபட்டனர்.


ஒரு கட்டத்தில் நாம் தமிழர் கட்சி நிர்வாகிகள் ஒன்று திரண்டு கட்டைகளுடன் சென்று கையில் சிக்கிய ஆதித்தமிழர் கட்சி நிர்வாகிகளை சரமாரியாக அடித்து உதைத்தனர். இதனால் சமாளிக்க முடியாமல் ஆதித்தமிழர் கட்சி நிர்வாகிகள் அங்கிருந்து தலை தெறிக்க தப்பி ஓடினார்கள்.


இந்த மோதலில் இரு தரப்பினருக்கும் லேசான காயம் ஏற்பட்டது. இருதரப்பினர் மோதலால் அந்த பகுதியே போர்க்களம்போல் காட்சி அளித்தது.


இந்த சம்பவம் குறித்து நாம் தமிழர் கட்சி சார்பில் போரூர் போலீசில் புகார் அளிக்கப்பட்டது. அதில் கட்சி நிர்வாகிகள் மற்றும் கட்சி அலுவலகத்தின் மீது தாக்குதல் நடத்தியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும், கட்சி அலுவலகத்துக்கு கூடுதல் போலீஸ் பாதுகாப்பு வழங்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. இதுகுறித்து போரூர் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர். மேலும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட ஆதித்தமிழர் கட்சி நிர்வாகிகள் 50-க்கும் மேற்பட்டோரை கைது செய்து தனியார் திருமண மண்டபத்தில் தங்க வைத்தனர்.


இந்த மோதல் நடைபெற்றபோது கட்சி அலுவலகத்தில் சீமான் இல்லை. இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.


இதற்கிடையில் இந்த மோதல் ெதாடர்பாக இருதரப்பினர் அளித்த புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து நாம் தமிழர் கட்சியை சேர்ந்த 3 பேரையும், ஆதித்தமிழர் கட்சியை சேர்ந்த 4 பேரையும் என இருதரப்பையும் சேர்ந்த 7 பேரை கைது செய்தனர்.


Next Story