பாடாலூரில் இருதரப்பினர் இடையே மோதல்; போலீசார் குவிப்பு


ஊர்வலத்தில் செருப்பு வீசியதால் பாடாலூரில் இருதரப்பினர் இடையே மோதல் ஏற்பட்டது. இதையடுத்து அப்பகுதியில் போலீசார் குவிக்கப்பட்டனர்.

பெரம்பலூர்

சாலை மறியல்

பெரம்பலூர் மாவட்டம் ஆலத்தூர் தாலுகா பாடாலூர் பகுதியில் இருதரப்பினரிடையே முன்விரோதம் காரணமாக பிரச்சினை இருந்து வருகிறது. இந்தநிலையில் முத்துமாரியம்மன் கோவிலில் ஊரணி திருவிழாவை ஒரு தரப்பினர் நடத்தினர்.

இந்தநிலையில் கோவில் ஊர்வலம் குறிப்பிட்ட தெருவில் செல்ல எதிர்ப்பு தெரிவித்து மற்றொரு தரப்பை சேர்ந்த 500-க்கும் மேற்பட்டோர் பாடாலூர்-ஊட்டத்தூர் சாலையில் மறியலில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் சமாதானம் அடைந்த அவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

இருதரப்பினர் இடையே மோதல்

இதற்கிடையே தமிழக மக்கள் முன்னேற்ற கழக கட்சித்தலைவர் ஜான் பாண்டியன் கோவில் திருவிழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். இதையடுத்து, குறிப்பிட்ட சமூகத்தை சேர்ந்த மக்கள் சாமி ஊர்வலம் நடத்தி ஜான்பாண்டியனை சாரட் வண்டியில் முக்கிய வீதிகள் வழியாக ஊர்வலமாக அழைத்து சென்றனர். அப்போது சிலர் ஊர்வலத்தில் செருப்பு வீசியதாக கூறப்படுகிறது.

இதனால் இருதரப்பினர் இடையே மோதல் ஏற்பட்டது. சிலர் கற்களை வீசி தாக்கினர். இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த பாடாலூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர்.

போலீசார் குவிப்பு

மேலும் அப்பகுதியில் அசம்பாவித சம்பவங்கள் நடைபெறாமல் இருக்க 300-க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டனர். மேலும் இந்த சம்பவம் தொடர்பாக 25 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து உள்ளனர். மேலும் 4 பேரை பிடித்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த சம்பவம் காரணமாக அப்பகுதியில் பரபரபப்பு ஏற்பட்டுள்ளது.


Next Story